டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்போது ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியிருந்தாா். இதுகுறித்து அவர் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, அவரின் டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிரந்தரமாக முடக்கியிருந்தன. இது நடந்து 9 மாதங்களுக்குப்பின் தற்போது, ‘உண்மை சமூகம்’ (ட்ரூத் சோஷியல்) என்ற பெயரில் தனக்கென பிரத்தியேக சமூக வலைதளத்தை டிரம்ப் நேற்று தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘டுவிட்டர் போன்ற வலைதளங்களில், தலிபான்கள் ஆதிக்கம் அதிகயளவில் இருக்கிறது. ‘ட்ரூத் சோஷியல்’ மூலம் சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவோம். வரும் நவ., மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சி, செய்திகள் கொண்ட வீடியோ சேவையையும் வழங்க திட்டமிட்டு உள்ளோம்’ என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.