Our Feeds


Saturday, October 2, 2021

ShortNews Admin

நைஜீரியர்களை நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோட்டா அதிரடி உத்தரவு



(எம்.எப்.எம்.பஸீர்)


‘நைஜீரியன் ஸ்கேம்’ எனும் பெயரால் பரவலாக அறியப்படும், நைஜீரியர்களால் முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்த சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றுடன் தொடர்புபட்ட அனைத்து நைஜீரியர்களையும் நாடு கடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறான பண மோசடிகளுடன் தொடர்புடைய சுமார் 44 பேர் வரை, வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் மிரிஹானை திறந்தவெளி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் நாடு கடத்த தற்போது தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதற்காக இலங்கை அரசாங்கத்தின் செலவின் விமானம் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அரசின் செலவில் இந்த நைஜீரியர்களை நாடு கடத்த சுமார் 41 இலட்சம் ரூபா வரை செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையில் 80 வீதத்தை பொலிஸ் மா அதிபர் நிதியத்திலிருந்து வழங்க பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இணக்கம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரை நைஜீரியர்களின் நிதி மோசடி தொடர்பில் 44 சந்தேக நபர்கள் கைதாகி தடுப்பு முகாமில் உள்ள போதும் அவர்களில் 24 பேருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக அறிய முடிகிறது.

எனவே அந்த 24 பேர் தொடர்பிலும் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, நாடு அடத்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த பேசப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

நைஜீரியர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளில், அவர்களை அழைத்து செல்ல விமான சேவைகள் பின் வாங்கும் நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் அழைத்து செல்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவசியம் ஏற்படுமாயின் இலங்கை விமானப்படையும் விமான வசதியை வழங்க முன் வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த நான்கு மாதங்களில் இவ்வாறான மோசடடிகள் தொடர்பில் 170 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பண மோசடிக்கு உள்ளானவர்களில் வைத்தியர்கள், உள்ளிட்ட சமூகத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் பலர் காணப்படுவதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் 94 நைஜீரியர்கள் தங்கியுள்ள நிலையில், தாங்களை பிரித்தனைய பிரஜைகளாக காட்டிக்கொண்டு பல்வேறு உக்திகளைக் கையாண்டு பண மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

பணம், தங்க நகைகள், பெறுமதியான பரிசில்களை அனுப்பியுள்ளதாகவும் அதனை சுங்கத்திலிருந்து விடுவிக்கவெனக் கூறி 7, 500 ரூபா முதல் பல்வேறு பெறுமதிகளைக் கூறி இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிகளில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் என சமூகத்தின் உயர் நிலையில் உள்ள பலரும் சிக்கியுள்ளதுடன்  இது தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளதால் நாடு கடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »