Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

ஆளுங்கட்சி பங்காளிகள் பகிரங்க கூட்டத்தில் அரசின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைப்பு - நடந்தது என்ன?

 



கெரவலபிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான 11 கட்சிகளும் இணைந்து நேற்று (29) மக்கள சந்திப்பொன்றை நடத்தின.


‘மக்களிடம் முறையிடுவோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த மக்கள் சந்திப்பு பிட்டகோட்டே சோலிஸ் மக்கள் மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, அத்துர லியே ரத்ன தேரர், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் உரையாற்றிய தலைவர்கள் தெரிவித்த தாவது,

வாசுதேவ நாணயக்கார

பெரும் நெருக்கடியான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இணைந்த எங்களுக்கு இந்த அரசின் செயற்பாடுகள் மற்றும் செல்லும் பாதை பெரும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

முதலில் எங்களுக்கு துன்பமே ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் இணைந்து இதனை மாற்றுவதற்கு முடிவெடுத்தோம். இந்த அரசாங்கத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சிலர் முடிவுகளை எடுத்து செயற்படுவதற்கு ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து அரசுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து எங்களுடைய நிலைப்பாடை தெரிவிப்பதற்கு ஆரம்பித்தோம்.

ஆனால், இதனை விட மோசமான பாதையை நோக்கிச் செல்வதை உணர்ந்தோம். குறிப்பாக, பொது மக்களிடம் முறைப்பாடு செய்வதற்கு தீர்மானித்தோம். அதன்படி, இது பொது மக்களிடம் முறையிடும் நேரமாகும் என்றார்.

அதாவுல்லாஹ்

நாங்கள் யாரும் எதிர்க்கட்சியல்ல. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு முன்னின்று நாம் செயற்பட்டோம். இங்குள்ள அனைவரையும் யார் என்று தெரியும். அதனால் நாங்கள் பொய்க் கூற வேண்டியதில்லை. உண்மையை கூற வேண்டும்.

அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, என்னை சந்தித்தபோது, இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான அரசியலமைப்பு வேண்டும் என்றே அவரிடம் கோரிக்கை விடுத்தேன். ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில் கெரவலப்பிட்டி மாத்திரம் பற்றி பேசுவது பொருத்தமற்றது. நாட்டை ஆட்சி செய்வதற்கான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.

அன்றிருந்த ஏகாதிபத்திய அதிகாரம் தற்போது வேறு வடிவில் மீண்டும் இலங்கைக்குள் நுழைகிறது. அன்று, ஒரே நாடு ஒரே சட்டம் என்றனர். ஆனால், இன்று ஒன்பது மாகாணங்களும் ஒரு மத்திய அரசும் இருக்கின்றன. ஒரே நாடு என்றால் அனைத்து மதங்களும் இல்லாது செய்வது என நினைக்கின்றனர். ஆனால், ஒரே சட்டம் என்பது ஒரே நாடாகும்.

சிங்கள மற்றும் முஸ்லிம்கள் மோத வேண்டியதில்லை. இந்த நாட்டின் சொத்துகளை சூறையாட காத்திருப்போரே இனவாதத்தை தோற்றுவிக்கின்றனர். பிரபாகரனின் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இந்தியா யுத்தம் செய்தன. இங்குள்ள சொத்துகளை சூறையாடுவதற்கே தவிர, எங்களுக்காக அல்ல. ஆகவே, எங்களுடைய சொத்துகள் முக்கியம். இன்று மன்னாரில் எரிவாயு இருப்பதாகக் கூறும் போது எங்களுக்கு எரிவாயு தேவையா?.

நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எங்களிடையே இனவாதமில்லை. இந்த நாட்டை பாதுகாப்பதற்கும் நாட்டின் சொத்துகளை பாதுகாப்பதற்குமான வழியை நாங்கள் காட்டுவோம்.

திஸ்ஸ விதாரண

எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் எங்களுடைய நாட்டிலுள்ள பொருளாதாரத்தை தங்களுக்கு ஏற்றவாறு முன்னெடுப்பதற்கு அமெரிக்காவிற்கு வாய்ப்புள்ளது.

அதேபோன்று, சோபா உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தால் அமெரிக்காவின் யுத்த முகாமொன்றை நிறுவியிருக்க முடியும். எனினும், அதனையும் தடுத்தோம். ஆனால், தற்போது எல்.என்.ஜி. மின் நிலையத்தின் பங்குகளை பெற்றுக் கொண்டு எங்களுடைய பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு வாய்ப்பளிக்கின்றோம். இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இந்த கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்கு கொடுப்பது எங்களுடைய நாட்டின் அழிவு பாதையின் முதல் படியாகும். இது குறித்து மக்களை தெளிவுபடுத்தி இதற்கு எதிராக குரல் கொடுப்பதே எங்களுடைய நோக்கமாகும். அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நாடு என்ற வகையில் இதற்கு எதிராக போராட வேண்டும் என்றார்.

உதய கம்மன்பில

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையின் படி, யுகதனவி மின் நிலையத்தின் 40 பங்குகளையும் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மின் நிலையத்தின் 49 வீத பங்குகளையும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அங்கு உருவாக்கப்படும் புதிய மின் நிலையத்தின் முழு பகுதிக்கும் வாழ்நாள் முழுவதும் எரிவாயு வழங்கும் அதிகாரம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு வழங்கும் அதிகாரத்தை அமெரிக்காவிடம் வழங்குவது பெரும் ஆபத்தாகும்.

2019 ஆம் ஆண்டு இதற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போது, எரிவாயு வழங்கும் திட்டத்தை நாங்கள் யாரிடம் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்தோம். எனினும், அமெரிக்க நிறுவனத்தின் முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மனுக்கோரலுக்கு சமூகமளிக்காத ஒரு நிறுவனத்திற்கு இவ்வாறானதொரு திட்டத்தை வழங்கியிருப்பது வரலாற்றில் முதல் தடவையாகும். இதுபோன்று, பிரேமதாச, சந்திரிகா மற்றும் ரணில் ஆட்சியில் நடந்ததில்லை.

இராணுவத்திற்கு தண்டனை வழக்காவிட்டாலும் சமஷ்டி ஆட்சியை கொண்டுவராவிட்டாலும் பொருளாதார தடை விதிப்போம் எனக் கூறிய அமெரிக்காவிடம் இதனை கொடுத்திருப்பதே மிகப் பெரும் ஆபத்தாகும். சர்வதேச நாட்டிடம் இந்த அதிகாரத்தை வழங்குவது ஆபத்து என்றால் எங்களை மிரட்டும் அமெரிக்காவிடம் வழங்குவது மிகவும் ஆபத்தாகும்.

தயாசிறி ஜயசேகர

11 கட்சிகள் இணைந்து எங்களுடைய அரசாங்கத்தின் சில சில செயற்பாடுகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. ஆட்சியை கவிழ்ப்பது, வேறொரு அரசியல் அதிகாரத்தை உருவாக்குவது என்பது இதன் அர்த்தமல்ல.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பெரும் நெருக்கடியிலுள்ளது. எனினும், எங்களுடைய கப்பலை எங்கும் மோதாது யாருக்கும் காயம் ஏற்படாதவாறு செலுத்த வேண்டும்.

எங்களுக்கு பலத்தை கொடுத்த கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அவசியம். ஆனால், பலத்தை வழங்கிய கட்சிகளின் கருத்துகளுக்கு செவிசாய்க்காது தங்களுடைய கருத்துகளை மாத்திரம் கொண்டு செயற்பட்டால் அங்கு பிரச்சினை ஏற்படும். இதனை மக்களிடம் கூறுவதற்கே நாங்கள் வெளியில் வந்தோம். அரசுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனை தீர்ப்பதற்கு நாங்கள் பல தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

இலங்கை பல இனத்துடன் யுத்தம் ஏற்படும் நிலைமைக்கு தள்ளிக்கொண்டிருக்கின்றது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் நாட்டுக்குள் பல முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், எரிவாயு அதிகாரத்தை ஒரு நாட்டுக்கு வழங்குவதே ஆபத்தானது. மனுக்கோரலில் எடுக்காது, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொள்வது வெட்கச் செயலாகும்.

நாட்டில் எரிவாயு எடுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு அமெரிக்காவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு அதிகாரத்தை நாங்கள் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு எதிர்காலத்தில் ஈராக் அல்லது லிபியா போன்று மாறுவதை தடுக்க முடியாது.

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய அதிகாரத்தை நாட்டில் தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்றார்.

விமல் வீரவங்ச

பெரும்பாலான அமைச்சரவைக் கூட்டங்கள் ஒன்லைனில் இடம்பெறுவதால் நேரில் சந்திப்பதைப் போன்றிருக்காது. இதனால் சமர்ப்பிக்கப்படும் பத்திரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடமிருக்காது.

இந்த நிலையில், எரிவாயு வழங்கும் அதிகாரம் அமெரிக்க நிறுவனத்திடம் வாழ் நாள் முழுவதற்கும் வழங்கப்பட்டுள்ளது. பொய்யாக 5 வருடங்கள் எனக் கூற வேண்டாம். எங்களுக்கு தெரியாத எதிர்காலம் வரை அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையை வாசிப்பதற்கு அமைச்சரவையின் செயலாளருக்கே நேரம் கிடைக்கவில்லையாம். இது தொடர்பாக நிதி அமைச்சர் விளக்கமளித்தபோது, குறித்த விடயங்கள் இணக்கப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திருட்டுத் தனமாகவே இது கொண்டுவரப்பட்டது. இதனை நீதிமன்றத்திலும் சொல்வோம். எனினும், இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அமைச்சுப்பதவிக்காக அமைதியாக இருக்க முடியாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொடுத்த மக்கள் ஆணையை கொள்ளையடிப்பதற்கு வழங்கவில்லை. இந்த எரிவாயு எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படலாம். இந்த எரிவாயு வழங்கும் முறையில் வெவ்வேறு மனுக்கோரல்களை வலுசக்தி அமைச்சு கோருவதற்கு தீர்மானித்திருந்தது. ஆனால், எரிவாயு வழங்கும் அதிகாரம் எங்களிடமே இருந்தது.

எரிவாயு வழங்கும் முழு அதிகாரமும் அமெரிக்காவிற்கு செல்வது எதிர்காலத்தில் பாரிய ஆபத்தாகும். இந்த அமைச்சு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே நாட்டில் பிறந்து, வாழ்ந்து இறப்போர் எங்களுடைய உடலை இங்கேயே புதைக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது எங்களுடைய நோக்கமல்ல. மக்களின் வாக்களிப்புக்கமைய செயற்பட வேண்டும். மேலும், இரு உடன்படிக்கைகளையும் கைச்சாத்திடுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.

(யோ.தர்மராஜ்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »