Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

ஞானசாரர் விவகாரம்; ஜனாதிபதியுடன் அதாவுல்லாஹ் வாய்த்தர்க்கம் - எவரையும் நம்பி நாமில்லை, விரும்பினால் அரசை விட்டு வெளியேறலாம் என பசில் கடும் பாய்ச்சல்

 



“அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை. எவரும் இங்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான வேலைகளைச் செய்வதை விடவும், அப்படியானவர்கள் வெளியே செல்லலாம்” என்று, ஆளுங்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் ஆத்திரத்துடன் கூறியதாக ‘தமிழன்’ பத்திரிகை இன்று (30) செய்தி வெளியிட்டுள்ளது.


ஆளுங்களின் தலைவர்கள் கூட்டம் நேற்று (29) அலறி மாளிகைளில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற போது, இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் – முஸ்லிம்களின் எதிரியென அதாஉல்லா தெரிவித்ததை அடுத்து, அங்கு கடும் அமளிதுமளி ஏற்பட்டதாகவும் மேற்படி பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி தொடர்பில் இங்கு ஜனாதிபதி விளக்கமளித்த போது, அதனை ஏற்க முடியாதென கட்சித் தலைவர்கள் பலர் – அங்கு கருத்து வெளியிட்டனர்.


இதன்போது அங்கு பேசிய அதாஉல்லா; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக ஞானசார தேரரை நியமித்தமை குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.


“ஞானசார தேரர் முஸ்லிம்களின் எதிரி, முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு அவர் காரணமாக இருந்துள்ளார். எங்களிடம் எதையும் கேட்காமல் நீங்கள் – எடுத்த எடுப்பில் அவரை நியமித்தபடியால், நம்முடன் இருக்கும் கொஞ்சநஞ்ச முஸ்லிம்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி விடுவார்கள்” என்று அதாஉல்லா அங்கு கூறியுள்ளார்.


அதாஉல்லாவின் இந்தப் பேச்சு காரணமாக ஆவேசமடைந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ; “நாங்கள் எப்படி நடக்க வேண்டுமென, நீங்கள் எங்களுக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை. நாங்கள் சரியான முடிவை எடுப்போம். நீங்கள் எல்லாவற்றையும் எங்களிடம் கேட்டா செய்கிறீர்கள்? அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே, அரசாங்கத்துக்கு எதிராக நீங்கள் வேலை செய்வதெல்லாம் எங்களுக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார்.


இதனால் கூட்டத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.


‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி சரியாக யோசித்தே நியமிக்கப்பட்டதாக இங்கு ஜனாதிபதி கூறிய போதும், அதனை ஏற்காமல் அதாஉல்லா வாய்த்தர்க்கம் செய்து, ஞானசார தேரரின் நியமனத்தைக் கண்டித்துள்ளார்.


இதனால் கடும் ஆத்திரமடைந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ; “அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை. எவரும் இங்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான வேலைகளைச் செய்வதை விடவும், அப்படியானவர்கள் வெளியே செல்லலாம்” என்று கூறியதாக தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »