Our Feeds


Sunday, October 24, 2021

ShortNews Admin

மாடறுப்புக்கு தடை விதித்து இனவாதிகளை சந்தோஷப்படுத்தி நாட்டிலுள்ள பிரச்சினைகளை திசை திருப்ப ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிக்கிறது - முஜீப் கடும் குற்றச்சாட்டு



(எம்.ஆர்.எம்.வசீம்)


நாட்டில் விலை அதிகரிப்பு, விவசாயிகளுக்கு  உரம் இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ள சந்தர்ப்பத்தில் இனவாத சிந்தனையுடன் மாடறுப்பு தடை விவகாரத்தை முன்னிறுத்தி மக்களை திசை திருப்ப ராஜபக்க்ஷ அரசாங்கம் முயற்சிப்பதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாடறுப்புக்கு தடைவிதிப்பதற்கு அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் நாளுக்கு நாள் வாழ்வாதார பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றன. மக்களின் ஜீவனோபாயம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது அரசாங்கம் திண்டாடுகிறது.

விவசாயிகளின் பிரச்சினைகள் இன்று மேலெழுந்துள்ளன. அவர்களுக்கு தேவையான உரம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை, அரசின் திட்டமிடலற்ற கட்டுப்பாடுகள் அவர்களை பெரும் அசௌகரியத்துக்கு ஆளாக்கி உள்ளன. இதனால் நாடு முழுவதிலும் விவசாயிகள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சமையல் எரிவாயு , எரிபொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. அரிசிக்கான உத்தரவாத விலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் கை மீறிப் போயுள்ளது . இது மாத்திரமின்றி, கட்டட நிர்மாணப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அரசாங்கம் இவற்றை கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்காது இவ்விடயங்களை இனவாதத்தின் ஊடாக திசை திருப்பி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளையே தொடர்ந்தும் செய்கிறது.

கடந்த வாரம் அமைச்சரவையில் திடீரென மாடறுப்புக்கான தடையை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இதன்மூலம் இனவாதிகளை சந்தோஷப்படுத்தி அவர்களை பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிக்கப்படுகின்றது.

மாடறுப்பு தடை செய்யப்படுவதனால் அதனுடன் இணைந்த தொழில் துறைகள் பாதிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் மாடறுப்பு தடையின் நோக்கம் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டிருந்தாலும், பண்ணை வளர்ப்பாளர்கள், மாட்டு வியாபாரிகள், தரகர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான தொழிற் துறையினர் பாதிக்கப்படுகின்றனர். மாடு மற்றும் மாட்டிறைச்சி வியாபாரத்தின் ஊடாக ஜீவனம் நடத்தும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் இல்லாமல் செய்கிறது. இதனால், இன்னோரன்ன பிரச்சினைகளை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »