Our Feeds


Sunday, October 31, 2021

SHAHNI RAMEES

கம்பளை வைத்தியசாலை நீர்த் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தந்தையின் மரணத்தில் சந்தேகம் என்கிறார் மகன்!

 


கம்பளை வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபினாத் தெரிவிக்கின்றார்.



பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு பின்னர் குணமாகியிருந்த சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்குள் வைத்து காணாமல்போயிருந்தார்



இது தொடர்பாக கம்பளை கொத்மலை பூண்டுலோயா பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் 51 நாட்களின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் எனினும் அவரின் சடலம் உருக்குலையாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது



மேற்படி சம்பவம் தொடர்பாக அவரது மகன் அபினாத் கருத்து தெரிவிக்கையில், தனது தந்தைக்கு வீட்டிலோ அல்லது தொழில் புரிந்த இடத்திலோ தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சிறிதளவேனும் பிரச்சினைகள் இருக்கவில்லை அவர் எங்களுடன் சந்தோஷமாகவே இருந்தார். ஆகவே இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார்


இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக இரசாயன பரிசோதனைகளுக்காக சடலத்தின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது



குறித்த மரணம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர மேற்கொண்டார் அவருடன் கம்பளை பிராந்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஸ்ரீயந்த பீரிஸ், உதவி பொலிஸ் பரிசோதகர் கமல் ஆரியவன்ச உட்பட அதிகாரிகள் அதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.


தொடர்புடைய செய்தி:   ஒன்றரை மாதங்களுக்கு முன் காணாமல்போன பொலிஸ் அதிகாரியின் சடலம் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் தாங்கியிலிருந்து மீட்பு!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »