உலகிலுள்ள முக்கிய அரச தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல்கள், ஆவணங்கள் “பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரில் வெளிவந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இலங்கை அரசியல்வாதியும், ராஜபக்ஸ குடும்ப உறவினருமான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் பெயர் வெளியாகியுள்ளளமை இலங்கை மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் இதன்மூலம் வௌிக்கொணரப்பட்டுள்ளன.
நிருபமா ராஜபக்ஸ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உறவினர் ஆவார்.
இவர் உள்நாட்டுப் போரின் போது பொறுப்புக்கு வந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதுடன், 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.
அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆவார். ஆலோசகராகவும், ஹோட்டல் தொழில்முனைவோராகவும் பணி புரிந்துள்ளதாக அவரது நிறுவன இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ICIJ இன் படி, 2016 ஆம் ஆண்டில், ஜனாதிபதி குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரான பசில் ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் தொடர்பாக மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதுடன், வில்லா ஒன்றைக் கட்ட பொது நிதியை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நடேசன் மற்றும் இலங்கையின் தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இந்த குற்றத்தை மறுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.