Our Feeds


Tuesday, October 19, 2021

SHAHNI RAMEES

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு அஞ்சோம்! – ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்


நேர்காணல்: தர்மராஜ் யோகராஜ்

ஆசிரியர்களுடைய இந்த போராட்டத்தை பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் அரசாங்கம் ஒரு பக்கத்தில் அரசியல்வாதிகளைக் கொண்டு அச்சுறுத்த முயற்சிக்கின்றது. இதனையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அச்சமடையப் போவதில்லை. ஆசிரியர்களும் அதிபர்களும் சுயமாக முன்வந்து முன்னெடுக்கும் போராட்டமிது. அதனால் இப்போராட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழன் வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவருடைய முழு செவ்வியும் வருமாறு,

கே: ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் அனைத்தும் தோல்வியடைகின்றதே என்ன நடக்கின்றது?

ப: 1997 ஆம் ஆண்டிலிருந்து இருக்கும் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறே நாங்கள் போராடுகின்றோம். அந்த காலப்பகுதியில் ஆசிரியர்களைத் தவிர ஏனையோருக்கு நூற்றுக்கு 60 வீதம் சம்பளத்தை அதிகரித்தமையினாலேயே இந்த சம்பள முரண்பாடு ஏற்பட்டது. அன்றிலிருந்து 24 வருடமாக ஆசிரியர்களின் இந்த சம்பள முரண்பாடு தீர்க்கப்படாதுள்ளது. இந்த நிலையில் தற்போது நாங்கள் முன்னெடுத்த போராட்டத்தினாலேயே ஓரளவு இறுதி முடிவுவரை வந்துள்ளோம்.

கே : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இரு கட்டமாக உங்களுடைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளாதமைக்கு காரணம் என்ன?

ப:ஆசிரியர்களின் இந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் சுபோதினி குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவிலிருந்து கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் எங்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு ஒரு யோசனையை முன்வைத்தனர். அந்த யோசனையின்படி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாரிய சம்பள அதிகரிப்பு காணப்பட்டது. அதன்படி, ஆரம்ப ஆசிரியர் சேவைக்கு 31 ஆயிரத்து 575 ரூபா சம்பள அதிகரிப்பை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

எனினும், இந்த யோசனையை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முடியாதெனக் கூறியதுடன், சம்பள முரண்பாட்டை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றையும் நியமித்தது. 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்வைத்த யோசனையையே இந்த உபகுழுவும் நடைமுறைப்படுத்துவதாக கூறியது. அதில் வகுப்பு ஒன்றுக்கு 11 ஆயிரத்து 275 ரூபாவே சம்பள அதிகரிப்பாக முன்வைக்கப்பட்டுள்ளதால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அமைச்சரவையின் உபகுழு முன்வைத்த யோசனையின்படி மூன்றில் ஒரு பங்கு சம்பள அதிகரிப்பே முன்வைக்கப்பட்டுள்ளது. அதனையும் நான்கு பகுதிகளாக வழங்குவதற்கே முதலில் அரசாங்கம் யோசனை முன்வைத்தது. பின்னர் கடந்த வாரத்தில் இடம்பெற்ற அமைச்சரவையில் அதனை மூன்று பகுதியாக வழங்குவதற்கே யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற பிரதமருடனான சந்திப்பின் போது ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை இரு பகுதிகளாக வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. அதிலும் முதல் பகுதியை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் இரண்டாவது பகுதியை 2023 ஆம் ஆண்டு ஜனவரியிலும் வழங்குவதற்கே யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆகவே, பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது முன்வைக்கப்பட்ட யோசனையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி அதனையும் நிராகரித்தோம். நாங்கள் முன்வைத்த யோசனைக்கு அமைய சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு இதுவரை இணக்கம் இல்லாதமையினால் எங்களுடைய போராட்டம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்கின்றது.

கே: பிரதமருடனான பேச்சுவார்த்தையின்போது இவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் அங்கு அதனை நிராகரிக்காது வெளியில் வந்து அதனை நிராகரித்தமையினால் ஆசிரியர் தொழிற்சங்க தலைவர்கள் தலைவர்களாக அல்லாது பொம்மைகளாக செயற்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்
துள்ளாரே?

ப:அவரும் ஒரு தொழிற்சங்க தலைவர் என்ற அடிப்படையில் அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தார். அந்த யோசனை முன்வைத்த சூழ்நிலையில் நாங்கள் எங்களுடைய முழுமையான எதிர்ப்பை தெரிவித்தோம். இரு பகுதிகளாக வழங்குவதற்கு முன்வைத்த அந்த யோசனையை நாங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சம்பள அதிகரிப்பை ஒரு பகுதியாக வழங்குமாறே அவ்விடத்திலும் நாங்கள் முன்வைத்தோம்.

அத்தோடு, இரு பகுதியாக வழங்கும் யோசனை முன்வைத்த பின்னர் அங்கிருந்த அனைவரும் எழும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் முன்வைத்த யோசனை தொடர்பான முடிவை அங்கிருந்த எங்கள் யாரிடமும் கேட்கவில்லை. ஒருவேளை, அவ்வாறு முடிவொன்றை கேட்டிருந்தால் அனைவரும் அதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.

பிரதமருடனான பேச்சுவார்த்தையானது மூன்றரை மணி நேரத்திற்கு அதிகமாக நடந்தது. இவ்வாறு மூன்றரை மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தையின்போது எவ்வாறு, எத்தனை கட்டமாக வழங்கமுடியும் என்பது பற்றி மட்டுமே பேசப்பட்டது. ஆகவே, இறுதியாக இரு பகுதியாகவே வழங்கமுடியும் என கூறிவிட்டு அனைவரும் எழும்பிச் சென்றனர். அதன் பின்னர் நாங்கள் என்ன கூற முடியும்.

ஒரு பேச்சுவார்த்தை மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்றது என்றால் அது எங்களுடைய முழுமையான எதிர்ப்பு இருக்கின்றது என்றே அர்த்தம். எங்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காகவே அரசிலுள்ள அமைச்சர்கள் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
எனினும், அவர்களின் கருத்துகளால் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றே கூற வேண்டும்.

கே: உங்களுடைய கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நீங்களும் அரசின் கோரிக்கைகளை ஏற்றுக்
கொள்ள மறுக்கின்றீர்கள். அப்படியானால் இந்தப் பிரச்சினை எப்போது தீரும்? இரு தரப்புகளினாலும் பாதிக்கப்படுவது மாணவர்கள் தானே?

ப: எங்களுடைய போராட்டத்தால் மாணவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லை. கொரோனா தொற்றினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட பாடசாலைகளை திறக்கவும் முடியாதுள்ளது. இதனால் மாணவர்களுக்கான பரீட்சைகளையும் நடத்த முடியாதுள்ளது.
ஆனால், எங்களின் போராட்டத்தால் இணையவழி (ஒன்லைன்) கல்வியே இல்லாதுபோனது. எனினும், அந்த ஒன்லைன் கல்வியானது, நூற்றுக்கு 40 வீதமானவர்
களுக்கு கிடைத்தது. ஏனைய 60 வீதமான மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வி எவ்விதத்திலும் கிடைக்கவில்லை. ஆனால், கொரோனா தொற்றினால் இல்லாது போன கல்வியை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தினாலேயே இல்லாது போனதாக காட்டும் முயற்சியாகவே அரசாங்கம் இவ்வாறான கருத்துகளை முன்வைக்கின்றது.

ஆனால், இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினாலேயே மாணவர்களுக்கான கல்வி இல்லாது போயுள்ளது. தற்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக பெற்றோரை தூண்டிவிடும் செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்து கொண்டிருக்கின்றது. அதுவும் நிலையான செயற்பாடாக அமையாது.

ஆகவே, மாணவர்களின் கல்வி இல்லாது போகும் வகையில் ஆசிரியர்களாகிய நாங்கள் எதனையும் செய்யவில்லை. தற்போதும் மாணவர்களுக்கான ஒன்லைன் கல்வி நடக்காதமைக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் உரிய தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க தவறியுள்ளமையே காரணமாகும்.

அத்தோடு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி அமைச்சரவையின் தீர்மானத்தையே ஒக்டோபர் 12 ஆம் திகதி கலந்துரையாடு
கின்றனர். அரசின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளே மாணவர்களின் கல்வி பாதிப்பதற்கு காரணமாகியுள்ளது. ஆகவே, எதனையும் கவனத்தில் கொள்ளாது எங்களுடைய போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

கே: உங்கள் பக்கத்திலும் அரசாங்கம் பக்கத்திலும் இப் பிரச்சினை தொடர்பாக உறுதியான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதற்கு உங்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த நடவடிக்கை என்ன?

ப: 21 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள முரண்பாட்டுக்கான உரிய தீர்வை வழங்க வேண்டும். இல்லையேல் எங்களுடைய போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. இது குறித்து அரசாங்கம் உடனடியாக ஒரு தீர்வை எடுக்க வேண்டும்.

ஆசியாவிலேயே மிகக் குறைந்த சம்பளத்தில் சேவையாற்றும் ஆசிரியர்
களாகவும் அதிபர்களாகவும் நாங்களே இருக்கின்றோம். ஆகவே, இதனை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும். பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறி ஏமாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அதற்கு எதிராகவே நாங்களும் செயற்படுவோம்.

கே: அரசாங்கத்தில் இருக்கும் நிதி நெருக்கடியே உங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்க முடியாதுள்ளமைக்கு காரணமென அரசாங்கம் கூறுகின்றதே?

ப: அரசாங்கத்தில் நிதி நெருக்கடி இல்லை. மாவட்ட தலைவர்களுக்கும் உப தலைவர்களுக்கும் அரசாங்கம் ஆயிரத்து 200 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
சீனி மோசடியில் 20 பில்லியன், 6 பில்லியன் ரூபா வரி வருமானம் பெற்றுக்
கொள்ளவில்லை.

இவ்வாறு பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது, அரசாங்கத்திடம் நிதி இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சுபோதினி அறிக்கையின்படி எங்களுக்கு 70 மில்லியன் தேவையாகும்.
ஆனால், உபகுழு அறிக்கையின்படி ஒரே முறையில் வழங்கினால் அதற்கு 30 மில்லியனே தேவையாகும். ஆகவே, அந்த 30 மில்லியனை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கே: ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும் சில ஆசிரியர்கள் தானாக முன்வந்து ஒன்லைன் கல்வியை முன்னெடுத்தபோது அவர்களுக்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதென கூறப்படுகின்றதே?

ப: இது பொய்யான குற்றச்சாட்டாகும். அவ்வாறானதொரு சம்பவம் எங்கும் இடம்பெறவில்லை. இவ்வாறான பல பிரசாரங்களை செய்வதால் எங்களை எதுவும் செய்ய முடியாது.

கே: 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கும்போது பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு யாரேனும் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறித்து உங்களுடைய கருத்து?

ப: அமைச்சர் சரத் வீரசேகர ஆசிரியர்களுடைய இந்த போராட்டத்தை பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு பேசியிருக்கின்றார். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அரசாங்கம் ஒரு பக்கத்தில் அரசியல்வாதிகளைக் கொண்டு அச்சுறுத்த முயற்சிக்கின்றது. மற்றொரு பக்கம் சரத் வீரசேகர போன்றவர்கள் அச்சுறுத்துகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அச்சமடையப் போவதில்லை. ஆசிரியர்களும் அதிபர்களும் சுயமாக முன்வந்து முன்னெடுக்கும் போராட்டமிது. அதனால் இப்போராட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »