புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் எம்.பியுமான லக்ஷமன் கிரியெல்ல, ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணிகளே புதிய அரசமைப்பை உருவாக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (21) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், 19ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்குக் கிடைத்த ஒவ்வொன்றையும் தற்போதைய ஜனாதிபதியால் இல்லாது செய்யப்படுவதாக ஐரோப்பிய ஒன்றி தூதுகுழுவினர் எதிர்க்கட்சியிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
குறிப்பாக சுயாதீன ஆணைக்குழு, அரசமைப்புப் பேரவைக்கு இருந்த சுதந்திரம் இல்லாது போயுள்ளது. அதேபோல பொலிஸ், நீதிமன்றம், சட்டமா அதிபர், அரச ஊழியர்கள் சுயாதீனமாக செயற்பட முடியவில்லை. இவற்றின் தீர்மானங்களை ஜனாதிபதியே எடுக்கிறார் எனவும் கூறினார்.
ஆணைக்குழுக்களை நாம் ஸ்தாபிக்கவில்லை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே ஸ்தாபித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கு நீதி அமைச்சர் இணங்குவரா? எனவும் கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய நீதியரசர் சட்டமா அதிபராக இருந்தபொது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து ஒவ்வொருத்தராக விடுதலை செய்யப்படுகிறார்கள். நீதித்துறையின் மோசமான நிலையையே இது காட்டுகிறது எனவும் கூறினார்.
இதுபோன்ற செயற்பாடுகளை நீதி அமைச்சர் எதிர்க்க வேண்டும். புதிய அரசியலமைப்பை ஜனாதிபதியன் தனிப்பட்ட சட்டத்தரணிகள் உருவாக்குகிறார்கள். இதனை பாராளுமன்ற தெரிவுக்குழுவே செய்ய வேண்டும். அரசாங்கத்தில் உள்ளவர்களிடமும் எந்தவிதமான கருத்துக்களையும் கேட்காமல் ஜனாதிபதி இதனை செய்கிறார் எனவும் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தைப் பாதுகாக்கவில்லை என்றால் சர்வதேசத்தின் கௌரவம் ஒருபோதும் இந்த அரசாங்கத்துக்குக் கிடைக்காது எனவும் கூறினார்.