ஞானசார தேரரைப் போன்ற அடிப்படைவாத கொள்கை கொண்டவர்கள் அனைத்து இனங்களிலும் இருப்பதாகவும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளாா்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய காலம் மலர்ந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி ஒவ்வொரு இன மக்களையும் நெருக்க முடியாது. அனைத்து தரப்பினரிலும் அடிப்படை வாதக்கொள்கையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். இங்கிலாந்தில் போன்று அடிப்படைவாதக் கொள்கையுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கத்தோலிக்கர்கள், முஸ்லிம்கள் என்று அவர்களை வகைப்படுத்த முடியாது. பௌத்தர்களுக்கு மத்தியில் ஞானசார தேரர் போன்று அனைத்து இனங்களிலும் அடிப்படை வாதக்கொள்கை உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். இது குறித்து அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். தொடர்ந்தும் கும்பல்களை உருவாக்கி அவற்றினூடாக பிரச்சினைகளை வளர்த்து மக்களை முட்டாள்களாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.