Our Feeds


Tuesday, October 19, 2021

SHAHNI RAMEES

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆயுட்கால உறுப்பினர் நான்! என்னைக் கட்சியிலிருந்து நீக்கவே முடியாது – டயானா கமகே

 

உரையாடல் -நா. தினுஷா

என்னை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு அந்தக் கட்சியின் தனிப்பட்ட தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நான் இன்னமும் அந்தக் கட்சியின் உறுப்பினர்தான். எனது உறுப்புரிமையிலிருந்து என்னை அவர்களால் வெளியேற்ற முடியாது. நான் அந்தக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ‘தமிழன்” வார இதழுக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார்.
அவருடனான உரையாடலின்போது அவர் பதிவுசெய்த கருத்துகளின் முழு விவரம் வருமாறு,

உங்களின் அரசியல் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா?

எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது அரசியல் நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஆனால், இதுவரையில் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீங்கவில்லையென நீங்கள் அறிவித்துள்ளீர்கள். இந்த விடயத்தின் உண்மைத்தன்மை என்ன?

என் விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் சகல முடிவுகளும் அவர்களின் தனிப்பட்ட தீர்மானங்கள். ஆனால், நான் இதுவரையில் ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளுக்காக எந்தவொரு இடத்துக்கும் சென்றதில்லை.

அவர்கள் தனிப்பட்ட ரீதியிலும், தன்னாதிக்கமாகவுமே என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், எனக்கு எதிராக எந்த ஒழுக்காற்று விசாரணைகளும் இடம்பெறவில்லை.

இவ்வாறான தீர்மானங்களுக்குக்குக் காரணம் என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றிவிட்டனவா?

எதிர்க்கட்சியில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே பல்வேறுபட்ட முரண்பாடுகள் இடம்பெறுகின்றன. கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருடன் கட்சிக்குள்ளிருக்கும் எந்தப் பிரதிநிதியும் மகிழ்ச்சியாக நடவடிக்கைளை முன்னெடுத்துச் செல்லவில்லை.

காரணம், அவர்கள் கட்சிக்குள் குழப்பநிலையை உருவாக்கியுள்ளார்கள். அவர்களிடம் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் எந்தவொரு எதிர்கால திட்டமும் இல்லை. தினந்தோறும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறார்கள். மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இதனை மாத்திரமே கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிலர் செய்து வருகின்றனர். இந்த செயற்பாடுகளின் காரணமாகக் கட்சியிலிருக்கும் ஏனைய பிரதிநிதிகள் மகிழ்ச்சியாக இல்லை.

கட்சிக்குள் குழப்பநிலை உருவாகி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியின் பங்காளியாகச் செயற்பட்டுவரும் பாட்டலி சம்பிக்க ரணவக்க 43ஆவது தேசிய கொள்கைச் சபையை உருவாக்குவதற்காகத் தனித்துச் செயற்பட்டு வருகின்றார். ஒருசில உறுப்பினர்கள் தனியானவொரு கட்சியை அமைத்துக்கொண்டு தனியாக செல்லும் நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.

தமது தலைவரிடம் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லையெனவும், சில விடயங்கள் பேச்சு மட்டத்தில் மாத்திரமே இருப்பதாகவும், செயற்பாட்டில் இல்லையெனவும் கட்சி உறுப்பினர்களே அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருக்கின்றன.

தற்போது உங்களின் நிலைப்பாடு என்ன? தொடர்ச்சியாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணிக்கும் முடிவில் இருக்கிறீர்களா? அல்லது மாற்று நிலைப்பாடு ஏதேனும் இருக்கிறதா?

நான் இன்னமும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்தான். எனது உறுப்புரிமையிலிருந்து என்னை அவர்களால் வெளியேற்ற முடியாது. அது எனது கட்சி. நான் அந்தக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். அதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் செயற்பட்டுள்ளேன்.
எப்போதும் நான் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்தான். ஆனால், இந்த அரசாங்கத்துக்குத் தொடர்ந்து எனது ஆதரவை வழங்குவேன்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து உங்களின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது, அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உங்களின் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தீர்கள். அப்படி இருக்கையில் தற்போது ஏன் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்?

அவ்வாறு இல்லை. அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை. அரசியலமைப்புத் திருத்தத்துக்கே ஆதரவளிக்கிறேன். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு நான் இணக்கம் தெரிவிக்கிறேன். காரணம் இவ்வாறானதொரு அரசியலமைப்புத் திருத்தம் எமது நாட்டுக்கு அவசியம். மக்களின் கோடிக்கணக்கான பணத்தை செலவளித்து ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்தி, ஜனாதிபதியொருவரை நியமிக்கின்றோம் என்ற நிலையில் அவருக்கு அதிகாரம் இல்லையென்றால் எப்படித் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்?

ஜனாதிபதியொருவருக்கு அதிரகாரத்தை வழங்காமல் எதற்காக மக்களின் பலகோடி ரூபாவை செலவளித்து அவரைத்தெரிவு செய்ய வேண்டும்? அவ்வாறு அதிகாரத்தை வழங்க முடியாவிட்டால் ஜனாதிபதி முறைமையை அரசியலமைப்பிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதுவித பயனும் இல்லை. மாறாக ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரத்தை வழங்க வேண்டும்.

அதிகாரமில்லாத பொம்மை போன்று அந்த பதவியில் அமர வைப்பதில் பயனில்லை. ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் முப்படைத்
தலைவர். அவ்வாறிருக்கையில் அவருக்கென அதிகாரமிருக்க வேண்டும். அதிகாரமின்றி அவர் எவ்வாறு நாட்டை முன்னெடுத்துச் செல்வார்? அதனால், இந்த விடயத்தில் நான் எனது இணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.

அதன் காரணமாகவே 20 ஆவது திருத்தத்துக்கு எனது இணக்கத்தைத் தெரிவித்துள்ளேன்.

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியால் இந்தப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாதென்றும், 20 ஆவது திருத்தத்தால் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றதல்லவா?

அவை தனிப்பட்ட நபர்களின் நிலைப்பாடு. 20ஆவது திருத்தம் வெற்றியடைந்துள்ளதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான
காலம் இன்னும் நிறைவடைய வில்லை. இன்னும் மூன்று வருடங்கள் மீதமிருக்கின்றன. காலம் நிறைவடையும்போது 20ஆவது
திருத்தம் வெற்றியளித்துள்ளதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்போம்.

அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்ட கொள்கைத் திட்டங்கள் இந்த இரு வருடங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று கருதுகிறீர்களா?

ஆட்சிக்கு வரும்போது இந்த அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறிவைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஜனாதிபதி ஆட்சிக்கு வரும்போது கொரோனா என்றவொரு நிலை நாட்டில் இருக்கவில்லை. ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டு கடமைகளைப் பொறுப்பேற்று சில மாதங்களின் பின்னரே கொரோனா நிலைமை உருவாகியது.

அதேபோன்று கொரோனா நிலைமை என்பது இலங்கைக்கானது மாத்திரமல்ல. முழு உலகமும் இதனால் பாதிப்படைந்துள்ளது.
இதுபோன்றதொரு நிலைமை ஏற்படும் என்றும் நாம் கருதவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. எதிர்பார்க்காத விடயங்கள் உலகில் நிச்சயம் இடம்பெறும். அதனை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது உலகத்துடன் இணைந்தே அவ்வாறான சவால்களை முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எமது நாடு மாத்திரமல்ல, முழு உலகத்திலும் இந்த நிலைமை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, இந்த தொற்று நிலைமையை சமாளித்துக்கொண்டே அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் கொண்டு செல்லவேண்டிய சூழ்நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை, அரசினதோ, ஜனாதிபதியினதோ, அல்லது அரசாங்கத்தினதோ தவறு கிடையாது.
இது யாரும் எதிர்பார்க்காதவொரு நிலைமையாகும். இந்த நோய் நிலைமையையும் சமாளித்துகொண்டு மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களை வழங்குவது, நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பிலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலைமையினால் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

மறுபுறம் எமது நாடு இன்னமும் அபிவிருத்தியடைந்து வரும் நிலையிலேயே இருக்கிறது. ஆகவே, ஏனைய நாடுகளை விட இந்நிலைமை எமது நாட்டுக்கு பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்தும் இந்த தொற்று நிலை நீடிக்கலாம். அவ்வாறில்லாவிட்டால் அடுத்த வருடத்தில் நிலைமை சீராகலாம். அவ்வாறான நிலைமை ஏற்படும்போது மக்களுக்கு வழங்க வேண்டிய சகல நிவாரணங்களையும் நிச்சயமாகப் பெற்றுக்கொடுப்போம். யாரும் மக்களை சிரமத்துக்குள்ளாக வேண்டும் என்று ஆசைக்குச் செய்வதில்லை.

அவ்வாறாயின் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கிறதா?

பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அரசியல் தீர்மானங்கள் எவ்வாறு அமையுமென்று உறுதியாகக் கூறமுடியாது. தற்போது அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி அவர்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டு எனது பயணத்தைத் தொடர்வேன். ஆனால், கட்சியின் உறுப்புரிமையை ஒருபோதும் இழக்க மாட்டேன். இதுவரையில் எனக்கான கட்சி உறுப்புரிமை ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கிறது. அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலேயே நாடாளுமன்றத்துக்கும் தெரிவானேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கும் ஆதரவாக செயற்படுவது உங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்குச் சிக்கலை ஏற்படுத்திவிடாதா?

எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு அவ்வாறானதொரு பிரச்சினையில்லை. எதிர்காலத்திலும் பிரச்சினையாக அமையப்போவதில்லை.
20 ஆவது திருத்தம் நாட்டு அவசியம் என்றதாலேயே அதற்கு ஆதரவளித்தேன். ஆதரவளித்துவிட்டுத் தனித்துச் செயற்பட முடியாது.
20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்து விட்டோம் என்று இடைநடுவில் கைவிட முடியாது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவளிக்க வேண்டும்.

ஆதரவளித்த பின்னர் அது பிழை, இது பிழையெனக் கூறவும் முடியாது. இத்திருத்தம் பொருத்தமானது என்று கருதியதால் எனது மனசாட்சிக்கேற்ப இத் திருத்தத்துக்கு ஆதரவளித்தேன். அதேபோன்று, அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டியதும் எனது கடமையாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்தத்துக்கு ஆதரவளித்திருந்தார்கள். இவ்வாறு ஆதரவளித்தவர்களின் கட்சித் தலைவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே இணைந்து செயற்படுகின்றனர். அனைவரும் ஒன்றிணைந்தே தேர்தலிலும் போட்டியிட்டிருந்தனர். அவ்வாறாயின் ஏன் அவர்களுக்கு எதிராக இன்னும் எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை?

அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இல்லை. பங்காளிக் கட்சி உறுப்பினர்கள் என்றால் அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாமே. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அறிந்தே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க தனியாக சென்று இயங்கி வருகிறார். அவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி தயங்குகின்றது? ஆகவே, திட்டமிட்டு என்னை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடாகவே இதனைக் கருதுகிறேன்.

அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடந்தால் எவ்வாறு செயற்பட எதிர்பார்த்துள்ளீர்கள்?

மாகாண சபைத்தேர்தல் இடம்பெற்றால், எடுக்க வேண்டிய முடிவுகளை அதன்போதே எடுப்பேன்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான நிலைப்பாடு உங்களிடம் இருக்கிறதா?

எனக்கு அவ்வாறானதொரு நிலைப்பாடு இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »