Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

இந்தியாவின் ஆளும் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது - நடந்தது என்ன?

 



தமிழகத்தின் கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9ஆவது வார்டுக்கு இடைத்தேர்தல் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார்.


கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார்.




அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்றார். 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். “கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர்.

அவரது குடும்பத்தினர், கட்சியினர் வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும். குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை” என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், `தனது குடும்பத்தினருக்கு 4-வது வார்டில் தான் ஓட்டு இருப்பதாகவும், தேர்தலில் பணநாயகம் வென்றதாகவும்’ விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக்.

நன்றி விகடன்




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »