கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் 150 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துசித்த சேனாபதி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கு https://lrh.health.gov.lk/ என்ற இணையத்தில் பிரவேசிப்பதன் ஊடாக நேரம், திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
இதேவேளை ஃபைசருக்கான பதிவு 12-19 வயதுக்குட்பட்ட மற்றும் குறிப்பிட்ட கொமொர்பிடிட்டிகளுடன் குழந்தைகளுக்கு மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் குழந்தையின் அனைத்து மருத்துவ பதிவுகளையும் கொண்டு வர வேண்டும் என்று கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி கொடுக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு அவர்கள் ஒரு ஆலோசகர் குழந்தை மருத்துவரால் மதிப்பீடு செய்யப்படுவார்கள். எனவே தடுப்பூசிக்கு பதிவு செய்வது தடுப்பூசி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மொனராகலை, நுவரெலியா மாவட்டங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று காலை ஆரம்பமானது. மாத்தறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. கேகாலை மாவட்டத்தில் 6 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் 90 சிறுவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளனர். தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு ஏற்றுவதில் பெற்றோர் பெரும் ஆர்வம் கொண்டுள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக்க தெரிவித்துள்ளார்.