Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

விகிதாசார முறைப்படி மட்டுமே அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் – தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டாக கோரிக்கை

 



பலமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம்  மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள், அனைத்து மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளினதும் மற்றும் அனைத்து சமூக குழுவினர்களினதும் பிரதிநிதித்துவங்களுக்கு  வழிவகுக்கும் வண்ணம், முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும் என சிறுபான்மை கட்சிகள் பல வலியுறுத்தியுள்ளன.


இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த கட்சி பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

இதன்மூலம் நாடாளுமன்றமும், மாகாணசபைகளும்,  உள்ளூராட்சி மன்றங்களும் தமது பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் செயற்பட முடியும் எனவும் இவர்கள் குறிப்பிட்டனர்.     

நாடாளுமன்றத்தினதும், மாகாணசபைகளினதும், உள்ளூராட்சி மன்றங்களதும் கட்சி அங்கத்துவ எண்ணிக்கை தொகுப்பு, வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்த வாக்கு ஆணையை அதிகபட்சமாக பிரதிபலிக்க வேண்டும். வெற்றி பெரும் கட்சி, அளிக்கப்பட்ட வாக்குகளில் தாம் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தை விட, அதிக விகிதாசார எண்ணிக்கையில்   ஆசனங்களை எடுத்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். வாக்கு விகிதாசாரமும், சபை அங்கத்தவர் எண்ணிக்கை விகிதாசாரமும், சாத்தியமானளவில் ஒன்றை ஒன்று ஒத்து போக வேண்டும். இந்நிலைமையை விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ்  மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.

 
உள்ளூராட்சி, மாகாணசபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று மட்ட தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால்  ஒரே வேளையில் தயார் செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் மூலம் அரசியலமைப்பு திருத்தமாக கொண்டு வரப்பட வேண்டும்.    

 ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்களை, முன்னுரிமை கொடுத்து, விகிதாசார முறையின் கீழ் நடத்த  அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன், சித்தார்தன், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார், ருஷ்டி (சட்ட செயலாளர் acmc), மதியூகயாஜா (cwc), தவராசா (epdp), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »