நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகமான மக்கள் கொள்வனவுகளுக்காகவும் தொழில்சார் செயற்பாடுகளுக்கும் வெளியில் செல்வதை அவதானிக்க முடிகிறது.
நாடளாவிய ரீதியில் விஷேடமாக கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரண வீதம் சடுதியாக குறைவடைந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது. இது ஒரு ஆரோக்கியமான நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதை பறைசாற்றுகிறது என்றே சொல்ல வேண்டும்.
என்ற பொழுதிலும் மரண விகிதம் குறைவடைவு, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தரப்பட்டிருந்தாலும் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
இந்த கொடிய வைரஸ் தொற்றை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பதற்கு நம்முன்னே இருக்கும் ஒரே வழி தடுப்பூசிகளை பெறுவது என்கிற ரீதியில் எந்த வகையான தடுப்பூசியாக இருப்பினும் அதை பெற்றுக் கொள்வதற்கு நாம் கரிசனம் கொள்ள வேண்டி இருக்கிறது.
கடந்த 40 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு அமைய கட்டுப்பாடுகளோடு இருந்த நாம் மீண்டும் ஒரு அலை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் கவனமாக செயற்பட வேண்டியுள்ளது.
திருமண ஒன்றுகூடல்கள், ஒன்றுகூடல் வைபவங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற வெகுஜன ஒன்று கூடல்களை மேற்கொள்வதற்குரிய சூழல் இன்னும் ஏற்படவில்லை என்பதை நினைவிற் கொண்டு சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் நாம் எம்மையும் எமது குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை இன்னும் எம்மை விட்டு அகலவில்லை என்பதை நினைவிற் கொண்டு, அதிலும் குறிப்பாக தடுப்பூசிகள் பெற்றவர்கள் தடுப்பூசி பெற்று விட்டோம் என்பதற்காக அலட்சியமாக இருந்து விடாமல் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி இந்த அசாதாரண சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு முயற்சிப்போம்.
இந்த கொரோனா தொற்றை முற்றுமுழுதாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கில் உழைத்த, உழைக்கின்ற வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறை ஊழியர்கள், போலீசார், ராணுவத்தினர் மற்றும் நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் செயல்படக்கூடிய தன்னார்வ அமைப்புகள், தன்னார்வளர்கள் அனைவருக்கும் நான் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அசாதாரண சூழ்நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு எமது நாடும் மக்களும் மீள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்கட்டும்.
-இஸ்திஹார்
தவிசாளர், அக்குறணை பிரதேச சபை