ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில், ஆளுங்கட்சியின் அவசரமானதும் முக்கியமானதுமான கூட்டமொன்று இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கியமை தொடர்பில் ஏற்கனவே நடந்துள்ள பல சந்திப்புகளில் கோரிய விளக்கங்களுக்கு தெளிவான பதில் கிடைக்காத காரணத்தினால் ,இன்றைய கூட்டத்தில் ஆளுங்கட்சியில் அங்கம்வகிக்கும் பங்காளிக்கட்சிகள் கேள்விகளை எழுப்பவிருப்பதாக அறியமுடிந்தது.
அதேவேளை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்லா திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் பகுதிக்கு சென்றுள்ளதால்,அங்கு இந்தியாவுக்கும் புதிதாக இடங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பன தொடர்பில் பங்காளிக்கட்சிகள் இன்று வினவவிருப்பதாக தெரியவந்தது.
இந்த விடயங்கள் தொடர்பில் முன்னதாக பங்காளிக்கட்சிகள் சில தனித்தனியே கூடி பேச்சு நடத்தியிருந்தன.எவ்வாறாயினும் இன்றைய தினம் நடத்தப்படும் பேச்சு தொடர்பில் சாதகமான பதில் அரசின் உயர்மட்ட தலைவர்களிடம் வராதபட்சத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டிவரலாமென பங்காளிக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.