Our Feeds


Friday, October 1, 2021

Anonymous

ரிஷாத்துக்கு எதிரான வழக்கின்போது நீதி மன்றுக்கு வந்திருந்த ஊடகவியலாளர் யார்? பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள்!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீனுக்கு பிணை வழங்க இன்றும் மறுத்த நீதிமன்றம் அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் (5 ஆவது சந்தேக நபர் தொடர்பில் மட்டும்) இன்று (01) முற்பகல் மீளவும் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையிலேயே இதுவரை இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் விளக்கினார்.

அதன்படி, விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும், 5 ஆவது சந்தேக நபர் குறித்த விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
5ஆவது சந்தேக நபரிடம் சிறையில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், சம்பவம் பதிவான வீட்டின் குடும்பத் தலைவர் அவர் என்பதால், அவரிடம் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கூறினார்.

குறிப்பாக சிசிரிவி பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னர்  அதனை மையப்படுத்தி அவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், தொலைபேசி தரவுகள் குறித்த அறிக்கையின் பின்னர் அதனை ஆராய்ந்தும் வாக்குமூலம் பெற வேண்டும் எனவும் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

‘இந்த விவகாரத்தில் தொடர்ச்சியான ஒரு அழுத்தம் கொடுக்கும் நிலைமையை நாம் அவதானித்துள்ளோம். முதலில் சம்பவத்தை அடுத்து ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு ஹிஷாலினியின் தாயார் உள்ளிட்டோர் சென்றபோது அங்கு இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சட்டத்தரணி ஒருவர் என அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையையும் பொலிஸ் மா அதிபர் எடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில், இவ்வழக்கு விசாரணையின் இடையே ஊடகவியலாளர் எனக் கூறிக்கொண்டு ரிஷாத் பதியுதீன் செயலர் ஒருவர் நீதிமன்றில் உட்கார்ந்து எமது வாதங்களை ஒலிப்பதிவு செய்ததாக நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அது தொடர்பில் விசாரணைகள் நடந்தன.

பர்சான் எனும் குறித்த நபர் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான செய்தியாளர் என குறித்த தனியார் தொலைக்காட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி வாக்குமூலமளித்துள்ளார். எனினும் அவருக்கு சம்பளமோ, கொடுப்பனவுகளோ அவர்களால் செலுத்தப்படுவதில்லையாம். அவர் தொடர்பிலான ஆவணங்களோ அவர்களிடம் இல்லை. எனினும் குறித்த தனியார் தொலைக்காட்சியில் ரிஷாத் பதியுதீனுக்கும் பங்குகள் இருந்தமையால் அவரை இவ்வாறு வெளிப்புற நடவடிக்கை செய்தியாளராக இணைத்திருந்ததாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.

செய்தியாளர் என கூறும் குறித்த நபர், அந்த சம்பவத்தின் பின்னர் நீதிமன்றுக்கு வரவே இல்லை. அவர் உண்மையிலேயே செய்தி சேகரிப்புக்காக நீதிமன்றுக்கு வந்திருந்தால் ஏன் அதன் பின்னர் வரவில்லை. இவ்வாறான ஒரு போக்கே இந்த வழக்கில் உள்ளது.

எனவே, 5 ஆவது சந்தேக நபரான ரிஷாத் பதியுதீனுக்கு பினணை வழங்க எதிர்ப்பு முன் வைக்கிறோம்.’ என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
ரிஷாத் பதியுதீன் சிறையில் உள்ளபோது தொலைபேசியை பயன்படுத்திய விடயத்தை மேற்கோள் காட்டி, அவர் பயன்படுத்திய தொலைபேசி இன்னும் பகுப்பாய்வு செய்யப்படாத நிலையில், இவ்வழக்குடன் தொடர்புடையோருக்கு அவர் அழைத்ததாக சந்தேகிக்கப்படுவதால் பிணை வழங்கக் கூடாது என திலீப பீரிஸ் மேலும் கோரினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »