பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த சில காலமாகவே, தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு வெளிவரும் தகவல்களை, ரோஹித்த ராஜபக்ஸ இதுவரை நிராகரிக்கவில்லை.
இந்த நிலையில், ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், வடமேல் மாகாணத்தை இலக்கு வைத்து களமிறங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக, ரோஹித்த ராஜபக்ஸ களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே, ரோஹித்த ராஜபக்ஸ, குருநாகல் மாவட்டத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
குருநாகல் வைத்தியசாலையில் நிலவிய பிரச்சினைகளுக்கும், ரோஹித்த ராஜபக்ஸ அண்மையில் தீர்வை பெற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க எதிர்பார்த்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தயாசிறி ஜயசேகர முயற்சித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.