உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ யாராவது அரசியல்வாதியின் பெயர் இருக்குமாயின் அவரது சொத்துகள் தொடர்பில், அதனை சம்பாதித்த விதம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கட்டாயமாக தேடி ஆராய வேண்டுமென, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவரது அமைச்சில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், தனக்கு தெரிந்த வகையில் வர்த்தக குடும்பத்துடன் தொடர்புடைய ஓய்வுப்பெற்ற அரசியல்வாதியொருவரின் பெயர் அதில் உள்ளதாக அறியக் கிடைக்கின்றது. அவரைத் தவிர அந்த ஆவணத்தில் வேறு அரசியல்வாதிகள் எவரும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிலுள்ள பெயர்ப் பட்டியலை பற்றி கதைப்பது முக்கிய விடயமல்ல. இந்த நபர்களுக்கு எதிராக ஏதேனும் சொத்து முறைகேடு உள்ளதா என்பது குறித்து இலஞ்சம் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என்றார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன,எவரேனும் ஒருவர் முறைகேடாக பணம் சம்பாதித்திருந்தால், நாட்டின்
சட்டத்துக்கு அமைய செயற்பட தயார் என்றும் அவ்வாறு சட்டத்துக்கு அமைய செயற்படும்
போது, அந்த நபர் யார் என்பது முக்கியமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
உலக அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வர்ர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல் பட்டியலான பென்டோரா பேப்பர்ஸ்’ இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான பிரபல வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயரும்
உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.