எரிபொருள் தொடர்பான பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில், நாடளாவிய ரீதியில் சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும், எரிபொருளுக்காக பல வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதையடுத்து நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்குமாறு பல தரப்பிலிருந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படாததால் டீசல் ஒரு லீட்டருக்கு முப்பது ரூபாவும் பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 20 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
இதேவேளை, எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்படாததால் நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சநிலை சமூகத்தில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.