Our Feeds


Wednesday, October 13, 2021

Anonymous

இரண்டு கட்டங்களில் கீழ் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இணக்கம்

 



ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளார்.


சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒரு சந்திப்பு நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்வை வழங்கி இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய (13) தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »