Our Feeds


Wednesday, October 20, 2021

SHAHNI RAMEES

எதிர்வரும் ஒருமாத காலம் தீர்க்கமானது – இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு

 

எதிர்வரும் ஒருமாத காலபகுதி மிகவும் தீர்க்கமானது என்றும் கொரோனா தொற்று நிலைமையை மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தேவையான மேலும்  சுகாதார விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

தொடர்ச்சியான விடுமுறையின் காரணமாக மக்கள் வெளி மாகாணங்களுக்குப் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாா்.
மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா். இராணுவ தளபதி மேலும் குறிப்பிடுகையில்,
இந்த வாரத்தில் தொடர்ச்சியான விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அநேகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்குச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது நாட்டில் இனங்காணப்படும் நோயாளர்கள் 600 இற்குள் வரையறுக்கப்பட்டுள்ளனர். மரணங்களும் 25இற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மக்கள் பெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.

அதனால், அதிக மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்வதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். கொரோனா பரவல் நிலையை மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முக்கிய காலப்பகுதியாக எதிர்வரும் ஒரு மாத காலம் கருதப்படுகின்றது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பார்களாக இருந்தால் எதிர்வரும் ஒரு மாதத்தில் தற்போதுள்ளதை விட கொரோனா நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

ஆனால், மக்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே கொரோனா நிலைமையை மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா? நிலைமையை சீர்செய்ய முடியுமா என்பதை உறுதியாக அறிவிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »