Our Feeds


Sunday, October 24, 2021

ShortNews Admin

அசாத் சாலி நாளை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவாரா?



(எம்.எப்.எம்.பஸீர்)


விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நாளை 25 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அவரை இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.

அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் உள்ளிட்ட குழுவினருடன் ஆஜராகி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நகர்த்தல் பத்திரம் ஊடாக கடந்த 13 ஆம் திகதி முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா, அசாத் சாலியை மன்றில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு பிறப்பித்திருந்தார்.

அசாத் சாலி, நீண்ட நாட்களாக விளக்கமறியல் உத்தரவின் கீழ் உள்ள நிலையில், அவருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதமே விசாரணைக்கு வரவிருந்தது. நீண்டகால விளக்கமறியலை கருத்தில் கொண்டு, அவரின் வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுக்குமாறும் அது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பது சிறந்தது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்ன கடந்த 13 ஆம் திகதி மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை ஆராய்ந்தே, அசாத் சாலிக்கு எதிரான வழக்கை நாளை (25) ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்திருந்த நீதிபதி, நாளைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அவர் நாளை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் என தெரிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »