கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் சில நாட்களாக இடம்பெற்று வந்த கலந்துரையாடல்களுக்கமையவும் கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கமையவும் இம்மாதத்தில் சகல பாடசாலைகளையும் கட்டங்கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் சகல ஆளுனர்களதும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பாடசாலைகள் பூட்டப்பட்டிருப்பதால் பாடசாலை சுற்றுச்சூழல், வகுப்பறைகள், தளபாடங்கள் உள்ளிட்டவை அசுத்தமாகியுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை மீண்டும் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மாகாண ஆளுநர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளில் (1-5) ஆரம்ப பாடசாலைகள், 100 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலைகளில் பாடசாலைகள் என 3,000 வரையான பாடசாலைகளை வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய மீள திறப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.