Our Feeds


Thursday, October 28, 2021

Anonymous

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிப்பதா இல்லையா - தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு.

 



உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கபப்டும் என புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று (27) அறிவித்தது.


நேற்றைய தினம் இந்த தீர்மானம் அறிவிக்கப்படவிருந்த நிலையில், வழக்கு விசாரணை ஆரம்பத்திலேயே, அடுத்த தவணையில் தீர்மானத்தை அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை நேற்று (27) மீளவும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழமையாக ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வந்த போதும், நேற்று (27) ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நான்கு தவணைகளின் பின்னர் இவ்வாறு ஊடகவியலாளர்கள் இவ்வழக்கை அறிக்கையிட அனுமதிக்கப்ப்ட்டமை விஷேட அம்சமாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம்கான் மொஹம்மட் சகீல் ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்றும் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.

கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் இவ்வாறு ஆஜர் செய்யப்ப்ட்டிருக்கவில்லை. எனினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான நளின் இந்ரதிஸ்ஸ, பர்மான் காசிம் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவுடன் சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

வழக்கு பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது முதலில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, பிரதிவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக வாதங்களை முன் வைத்தார்.

´ நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதி செய்வதற்காக, பிரதிவாதிக்கு தன்பக்க நியாயங்களை முன் வைக்க தேவையான சான்றுகளை வழக்குத் தொடுநர் தரப்பிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

அவ்வாறு எமக்கு அவசியமான சான்று ஆவணங்களை நாம் பட்டியலிட்டு கையளித்திருந்த நிலையில், அவற்றில் சில கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் பல கிடைக்கவில்லை.

அவற்றை இன்று ( 27) பட்டியலிட்டு மன்றுக்கு கையளித்துள்ளதுடன், அதன் பிரதியை வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்புக்கும் கொடுத்துள்ளோம்.

அதன்படி அவ்வாவணங்களை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கின்றோம்.

அத்துடன் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்ப்ட்டிருந்த சான்றுப் பட்டியலில் அடங்கியிருந்த புகைப்படத் தொகுப்பின் பிரதியையும் எமக்கு கையளிக்குமாறு கோருகின்றோம்.

அதே நேரம், சாட்சி கட்டளை சட்டத்தின் கீழ் முன் வைக்கப்ப்ட்டுள்ள இலத்திரனியல் பொருட்களை பரிசீலிக்க இடம், நேரம், திகதியை எமக்கு தருமாரும் நாம் கோருகின்றோம்.´ என தெரிவித்தார்.

இதனையடுத்து மெளலவி சகீல் கான் சார்பில் அஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவும், ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸவின் வாதங்களை ஆமோதித்ததுடன், அதற்கு மேலதிகமாக சட்ட மா அதிபர் சான்றாவணங்கள் எதையேனும் தர மறுத்தால், அது தொடர்பில் மன்றில் வாதங்களை முன் வைத்து உத்தரவொன்றினை பெற எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

இதன்போது, நீதிபதி குமாரி அபேரத்ன, எந்த சான்றுகளை வழங்குவது, எதனை மறுப்பது என இறுதியான நிலைப்பாட்டை சட்ட மா அதிபர் இன்னும் தெரிவிக்காத நிலையில், எதிர்வரும் தவணையில் அதனை உறுதி செய்த பின்னர் அவ்வாறான வாதம் ஒன்று அவசியம் எனில் முன் வைக்கலாம் என அறிவித்தார்.

இதனையடுத்து வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரால் சுதர்ஷன டி சில்வா, விடயங்களை மன்றுக்கு தெரிவித்தார்.

´கனம் நீதிபதி அவர்களே, இன்று ( நேற்று 27) பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் அவசியமான சான்றாவணங்களின் பட்டியல் என ஒரு பட்டியலை கையளித்துள்ளனர். அதில் வழக்கு விசாரணை ஆரம்பிக்க முன்னர் அவசியமான ஆவணங்களையும், வழக்கு விசாரணையிடையே பெற்றுக்கொள்ள முடியுமான ஆவணங்களையும் அவர்கள் வேறாக கொடுத்துள்ளனர்.

நல்லது. அது தொடர்பில் நான் மன்றில் ஆஜரகையுள்ள விசாரணை அதிகாரிகலின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு சில விடயங்களை தெளிவுபடுத்துகிறேன்.

வழக்கு விசாரணைக்கு முன்னதாக அவர்கள் கோரும் சான்றாவணத்தில் முதலாவது, தட்டச்சு செய்யப்பட்ட வாக்கு மூலங்களின் கையெழுத்தினாலான மூலப் பிரதியாகும். இதனை வழங்க முடியாது. அது பொலிஸ் சுற்றரிக்கைகளை மீறும் செயல். எனவே அதனை வழங்க முடியாது.

2 ஆவதாக கோரும் விடயத்தையும் வழங்க முடியாது.

3, 4 ஆம் சான்றாவணங்கள் சி.சி.டி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ளது.

இவ்வழக்கு சி.சி.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்த விடயமாகும். எனினும் சி.சி.டி. பொறுப்பிலுள்ள அந்த ஆவணங்களை பெற்றுக்கொடுக்க பரிசீலிக்க முடியும்.

6 ஆவது கோரிக்கையாக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது பொலிஸ் அத்தியட்சகர் கையளித்திருக்க வேண்டிய அதிகாரத்தை கையளிக்கும் எழுத்து மூல கடிதம் கோரப்பட்டுள்ளது. இந்த கடிதம் இவ்வழக்குடன் தொடர்புபட்டது அல்ல. முதல் பிரதிவாதி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கான சான்றுகலை சேகரிக்க இக்கோரிக்கை முன் வைக்கப்ப்ட்டுள்ளது.

அது தொடர்பில் அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஆஜராக்கும் அரச சட்டவடஹியை கேட்காமல் என்னால் முடிவெடுக்க முடியாது. 7,8 ஆம் கோரிக்கைகளும் அவ்வாறானதே.

13,15 ஆம் கோரிக்கைகள் தொடர்பில் மீள பரிசீலித்து குறைப்பாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்ய முடியும். 21,22 ஆம் கோரிக்கைகளும் அடிப்படை உரிமை மீறல் மனுவுடன் தொடர்பு பட்டது என குறிப்பிட்டார்.

இதன்போது ஹிஜாஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நலின் இந்ரதிஸ்ஸ, வெருமனே முடியாது என கூறாமல் ஏன் அவற்றை தர முடியாது என்ற காரணத்தையும் மன்றில், உரிய வகையில் முன் வைக்க வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகள் நியாயமான வழக்கு விசாரணைக்காக அவர்களது தரப்பு நியாயங்களை சமப்பிப்பதர்காக கோரும் குறித்த சான்றாவண பட்டியலில் எவற்றை வழங்க முடியும் எதனை வழங்க முடியாது என உறுதியாக அடுத்த தவணை மன்றுக்கு அறிவிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தார்.

அதன் பின்னர் ஏதேனும் ஒரு சான்றாவணத்தை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட மன்றின் அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிடுவது தொடர்பில் ஆராய முடியும் என அவர் சுட்டிக்காட்டியதுடன், ஹிஜாஸ் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களுக்கும் பிணையளிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்து அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

அத்துடன் இந்த விவகாரத்தின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதாகவும் அவர் அறிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »