Our Feeds


Monday, October 18, 2021

Anonymous

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

 



(நா.தனுஜா)


சிறுபான்மையின சமூகத்தை இலக்கு வைக்கும் விதத்திலான அரசாங்கத்தின் கொள்கைகள் உச்சம் பெற்றதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற தொடர்ச்சியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளினால் இலங்கையின் முஸ்லிம் சமூகம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, மிகுந்த விசனத்துக்கும் கரிசனைகளுக்கும் உரிய இந்தப்போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.


அதுமாத்திரமன்றி தற்போது பரிசீலனையில் உள்ள முஸ்லிம்களை ஒடுக்கும் வகையிலான முன்மொழிவுகளை அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2013 இல் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் எழுச்சியுடன் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு வலுப்பெற்றது. அது முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கொவிட் – 19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கான தீர்மானம், நிகாப் மற்றும் மத்ரஸாக்களைத் தடைசெய்வதற்கான முன்மொழிவு உள்ளடங்கலாக முஸ்லிம்களைப் புறந்தள்ளும் வகையிலான அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கங்கள் என்ற ரீதியில் விரிவாக்கம் பெற்றது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு என்பது புதிதல்ல என்றபோதிலும், அண்மைய வருடங்களில் அது மேலும் தீவிரமடைந்துள்ளது. அதிகாரிகளின் மறைமுகமான அனுமதியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட வன்முறைகள் பல்வேறு கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. அதேவேளை தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் கொள்கைகள் வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு விரோதமானவையாகக் காணப்படுகின்றன.

மிகுந்த விசனத்திற்கும் கரிசனைகளுக்கும் உரிய இந்தப்போக்கை அரசாங்கம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் அதேவேளை, தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாத்தல், இத்தகைய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைச் சட்டத்தின்முன்நிறுத்துதல் மற்றும் முஸ்லிம் சமுகத்தை இலக்குவைப்பதும் அவர்களுக்கு எதிரானதுமான கொள்கைகளின் பயன்பாட்டை நிறுத்துதல் ஆகியவை உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கம் அதன் பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றவேண்டும்.

குறிப்பாக 2013 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஹலாலுக்கு எதிரான பிரசாரத்திலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு வலுவடையத் தொடங்கியது. இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் பிரகாரம் உணவுப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் ஹலால் சான்றிதழை இல்லாமல்செய்வதற்கான முயற்சிகளும் பிரசாரங்களும் சிங்கள பௌத்த தேசியவாதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டன.

அந்தப் பிரசாரங்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »