Our Feeds


Monday, October 18, 2021

Anonymous

கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்கு ஜனாதிபதி மறுப்பு - மஹிந்த, பசிலுடன் பேசுமாறு அறிவிப்பு.

 



கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை நியூ போட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு அரசின் பங்காளிக்கட்சிகள் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.


அரசியல் மற்றும் அரசின் கொள்கைகள் சம்பந்தப் பட்ட விடயங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் பேசுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின் பங்காளிக் கட்சிகளுக்கு கடிதமொன்றின்மூலம் அறிவித்துள்ளார்.

முன்னதாக, யுகதனவி மின் நிலைய விற்பனை குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு கோரி அரசின் 11 பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தன. அந்தக் கடிதத் திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடமும், நிதியமைச்சரிடமும் பேச்சு நடத்தவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

யுகதனவி மின் நிலையத்தின் 40 வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து அரசின் பங்காளிக்கட்சிகள் செப்டெம்பர் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தின. அந்த சந்திப்பில் திருப்தி இல்லை என்பதால் ஜனாதிபதியை சந்தித்துப் பேச இந்த கட்சிகள் தீர்மானித்தன. அதனையடுத்து ஜனாதிபதிக்கு 11 கட்சிகளால் கடிதமொன்று அனுப்பப்பட்டது. அந்த கடிதத்திற்கு அனுப்பிய பதிலிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கடிதம் குறித்து பங்காளிக்கட்சிகள் நேற்று கூடி தீவிரமாக ஆராய்ந்துள்ளன. அரசின், அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி என்பதால் அவரிடம் பேச்சு நடத்தவேண்டுமென வலியுறுத்தி மீண்டும் கடித மொன்றை ஜனாதிபதிக்கு அனுப்புவதென இங்கு தீர்மானிக்கப்பட்டது. மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியவர்கள் யார் என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளதால், ஜனாதிபதியை மட்டும் சந்தித்து இதற்கான பதிலை பெறுவதென பங்காளிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »