Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

பொறுப்பற்ற அரசாங்கம்- கடுந்தொனியில் தாக்கினார் பேராயர் மெல்கம் ரஞ்சித்

 



ஜனநாயகத்துக்கு எதிராகவும் தான்தோன்றித்தனமாகவும் செயற்படுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அமைச்சர்கள் என யாருக்கும் நாங்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. மக்களுக்கு எதிரான தீர்மானங்களை எடுப்பதாயின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வீதியில் இறக்குவோம் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.


தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு கடற்கரைக்கு நேற்று (26) விஜயம் செய்தபோது, அங்கு இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு நீண்ட காலம் செல்லும் என்பது எங்களுக்கு புரிகின்றது. அவர்களின் தொழிலை முன்னெடுப்பதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடற்கரைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அரசாங்கம் தங்களுடைய பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும். இதுவரை கப்பலை எடுப்பதற்கு நிறுவனத்தால் முடியாதுள்ளது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

குறிப்பாக, குறித்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்துமாறு அரசாங்கம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் வறுமையான நாடு என்பதால் அந்த நிறுவனங்கள் எங்களிடம் சண்டித்தனம் காட்ட முயற்சிக்கின்றனர். குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அவ்வாறு மிரட்டுவதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.

இது சுயாதீன நாடு. எங்களுடைய சுயாதீனத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கும் அதற்காக பேசுவதற்கும் ஜனாதிபதியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். 1948 க்கு முன்னர் அவர்களுக்கு நாங்கள் தலைகுனியும் நிலைமை காணப்பட்டது. ஆனால், தற்போது நாங்கள் அவர்களுக்காக தலைகுனிய முடியாது. வேறு நாடுகளுக்குச் சென்று இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தினால் டொலர் பில்லியன் கணக்கில் நஷ்டஈடு செலுத்த வேண்டும்.

ஆகவே, எங்களுடைய கடற்பரப்பை சீர்குலைத்துள்ளதாக அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். மீனவர்களுக்காக இதனை அரசாங்கம் நிச்சயம் செய்ய வேண்டும்.

மக்கள் வாக்களித்து அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்தால் அந்த மக்கள் பக்கமே அரசாங்கம் இருக்க வேண்டும். சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தலையிடும் நிலைமைக்கு தள்ளப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே நாங்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தோம். நாட்டை பாதுகாப்பது என்பது குண்டு வெடிக்காது தடுப்பதல்ல. மாறாக, நாட்டின் சொத்துகளையும் நாட்டின் சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டும்.

அதேபோன்று, முத்துராஜவெல தொடர்பாக இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் புதிய வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மக்களுக்கு எதிரான தீர்மானமாகும். ஆகவே, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். இதனை நாங்கள் செய்யாதிருக்கவும் மாட்டோம்.

மக்களின் இட உரிமையை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்க முடியாது. 100, 200 வருடங்களாக அந்த மாகாணங்களில் வசிக்கும் மக்களின் இட உரிமையை நகர அபிவிருத்தி அதிகார சபையின் டை, கோர்ட் அணிந்திருக்கும் அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்க முடியாது. அதற்கு நாங்கள் அதிகாரம் கொடுக்கவில்லை. இது மக்களுக்கு எதிரான செயற்பாடாகும். அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதியே கைச்சாத்திட்டுள்ளார். ஆகவே, இதற்கு எங்களுடைய கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.

தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அமைச்சர்கள் யாருக்கும் நாங்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. இவ்வாறான விடயங்களை செய்வதற்கு முன்னர் மக்களின் நிலைப்பாட்டை வினவ வேண்டும். இதுவே, ஜனநாயகமாகும். ஜனநாயகத்துக்கு எதிராகவும் தான்தோன்றித் தனமாகவும் செயற்படுவதற்கு நாங்கள் யாருக்கும் இடமளிக்க முடியாது. ஆகவே, மக்களின் விருப்பப்படி செயற்படுவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் செயற்படுவதற்கு பழகிக் கொள்ளுமாறு நான் ஒரு சவாலாக கூற விரும்புகிறேன்.

ஆகவே, கடற்பரப்பை சுத்தம் செய்தல் மற்றும் கடலிலுள்ள கப்பலை மீட்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும். அத்தோடு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குறித்த கப்பல் நிறுவனத்திடம் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். முதுகெலும்புள்ள தலைவர் என்றால் இதனையே செய்ய வேண்டும். அவ்வாறில்லையேல், அவர்களுக்கு முதுகெலும்பில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

இந்த கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை முற்றாக இல்லாது செய்து கடற்பரப்பையும் மக்களையும் சாதாரண நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். இதன் பொறுப்பு முதலில் நாங்கள் வாக்களித்த அரசுக்கே சொந்தமானது. தங்களுடைய பொறுப்பை நிறைவேற்ற முடியாவிட்டால் அதனை மக்களிடம் கூற வேண்டும். ஒருவேளை, பொறுப்பை நிறைவேற்றினால் அதனை நூற்றுக்கு நூறு வீதம் செய்ய வேண்டும். சிறிய தொகையை கொடுத்துவிட்டு தப்பிச் செல்ல கப்பல் நிறுவனத்திற்கு இடமளிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சரும் உரிய நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மக்களின் உரிமை. இலஞ்சம் பெற்றுக்கொள்பவர்களின் உரிமையல்ல. நாட்டில் அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அவரை ‘மிஸ்டர் 10 பேர்சன்’ என்றே அழைப்பார்கள். இது வெட்கமடைய வேண்டும். மக்களின் வயிற்றில் அடித்து பணம் சம்பாதிக்கக் கூடாது. அந்தப் பணம் அனைத்தும் இரத்தக்கறை கொண்டது. அவை ஒருபோதும் தங்காது – என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »