Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

ஈராக் தேர்தல் - ஷீயா மதப்பிரிவுக் கட்சி முன்னிலை - சுன்னி கூட்டணிக் கட்சிக்கு பின்னடைவு

 



ஞாயிற்றுக்கிழமை வாக்குபதிவு நடந்த இராக் நாடாளுமன்ற தேர்தலில் தமது சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக ஷீயா மதப்பிரிவின் மதகுரு மூக்ததா அல்-சதர் தெரிவித்துள்ளார்.


இராக்கில் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இரானின் தலையீடு இருப்பதை நிறுத்த விரும்பும் அல்-சதர் வெளிநாட்டு தலையீடுகள் எதுவும் இல்லாத புதிய அரசு அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் பகுதியளவு வெளியாகியுள்ளன.


மொத்தமுள்ள 329 நாடாளுமன்ற இடங்களில் அல்-சதரின் சேரோன் இயக்கம் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


சுன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த முகமது அல்-கல்போசியின் 'தக்கதூம்' கூட்டணி இதுவரை 38 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது.


இரானுக்கு ஆதரவான பஃடா கூட்டணி வெறும் 14 இடங்கள் மட்டுமே வென்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அல்-சதர் தலைமையிலான கூட்டணி பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு ஆட்சியமைப்பதற்கு இன்னும் சில வார காலம் ஆகலாம். அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் அல்-சதர் புதிய அரசுக்குத் தலைமை ஏற்க முடியாது.


நம்பிக்கை இழந்த மக்கள்


தற்போது நடந்து முடிந்துள்ள இராக் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 41 சதவிகித வாக்காளர்களே வாக்களித்தனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதப் பிரிவுகள் மற்றும் இன அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்பது உண்மையில் நடக்காது என்ற இராக்கியர்களின் நம்பிக்கையின்மையே பெரும்பாலானவர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் போனதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.


இராக்கில் ஆட்சியில் இருந்த சதாம் உசேன் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பால் 2003ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் மேட்டு குடியை சேர்ந்த சிலரே ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துள்ளனர்.


2019ஆம் ஆண்டு இராக்கில் ஊழல், வேலையின்மை, அரசின் சேவைகள் தரமற்ற வகையில் இருப்பது உள்ளிட்டவற்றின் காரணமாக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.


இந்தப் போராட்டத்தின்போது இராக் பாதுகாப்பு படைகள் மற்றும் இரானுக்கு ஆதரவான சில தீவிரவாத அமைப்புகள், குறிப்பாக பாப்புலர் மொபைலைசேஷன் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் உள்ளிட்டோரால் சுட்டுக் கொல்லப்பட்ட 550க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்.


இந்த நாடாளுமன்ற தேர்தல் 2022ஆம் ஆண்டுதான் நடைபெற இருந்தது.


ஆனால் 2019 இல் நடந்த பெரும் போராட்டங்கள் காரணமாக ஆறு மாதங்கள் முன்கூட்டியே நடத்தப்பட்டது.


இதுவரை அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தலில் பங்கேற்க முடியும் போராட்டங்களுக்கு பின்பு சுயேச்சை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் பங்கெடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.


2018ஆவது ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடும் பொழுது அல்சத்ரின் கூட்டணி 19 இடங்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன என அரசுக்குச் சொந்தமான இராக் நியூஸ் ஏஜென்சி செய்தி முகமை தெரிவிக்கிறது.


2019ஆம் ஆண்டு நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்களின் போது புதிய சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த வேட்பாளர்களும் இந்த தேர்தலில் சில இடங்களில் வென்று உள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »