Our Feeds


Tuesday, October 26, 2021

Anonymous

நாட்டின் நிர்வாகத்தை பிரதமரிடம் கொடுங்கள் ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவம் இல்லை – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அதிரடி

 



நேர்காணல்:- யோ.தர்மராஜ் - தமிழன் பத்திரிக்கை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறிதேனும் அரசியல் அனுபவம் இல்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே சிறந்த அரசியல் அனுபவம் உள்ளது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி எவ்வளவு முயற்சி செய்தாலும் அரசியல் அனுபவமில்லாததால் அது சாத்தியமற்றது. ஆகவே, ஜனாதிபதி தன்னுடைய பதவியிலிருக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் ஆட்சி மற்றும் நிர்வாக அதிகாரத்தை பிரதமருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.


தமிழன்| வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவரின் முழு செவ்வியும் வருமாறு,

கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட நீங்களே அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்னவாயிற்று?


பதில் : அரசாங்கத்தை நாங்கள் விமர்சிக்கவில்லை. கடந்தஅரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தமையினாலேயே தற்போதைய அரசாங்கத்தை கொண்டுவந்தோம். எனினும், கடந்த அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் சிறு வித்தியாசத்தைக் கூட எங்களால் பார்க்க முடியவில்லை. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.


அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு கொரோனாவை காரணமாகக் கூறுவதற்கு தயாராக இருக்கின்றனர். ஆனால், மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்கல்ல. மாறாக, தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகவுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு உதவிசெய்தது போன்று அரசாங்கத்தில் ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு எங்களுக்கு பூரண அதிகாரமுள்ளது. அதன்படியே நாங்கள் செயற்படுகின்றோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு கொடுக்கமாட்டோம் என்றனர். ஆனால், இன்று அது தலைகீழாகவே நடைபெறுகிறது.

இதனால் மக்கள் மத்தியிலும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகரித்துள்ளனர். ஆனால், அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், சரியானவர்கள் இந்த அரசாங்கத்தில் இல்லை. வேலைகள் செய்வதற்கு யாருமில்லை. முறையான நிர்வாகமுமில்லை, ஆலோசனை வழங்குவோரும் தவறான ஆலோசனைகளையே வழங்குகின்றனர். இதனாலேயே மக்கள் பெரும் அதிருப்தியிலுள்ளனர். மக்கள் மத்தியில் யாருக்கும் அதிருப்தி ஏற்பட்டால் அவர்களால் முன்னோக்கிச் செல்லமுடியாது.


மக்களே அனைவருக்கும் முக்கியமானவர்கள். உரிய திட்டமில்லாது சேதனப் பசளைத் திட்டத்தை முன்னெடுத்து விவசாயிகளை தவிக்கவிட்டுள்ளனர். முறையான திட்டங்களை முன்வைத்த பின்னரே எதனையும் செய்யவேண்டும். ஆனால், அவ்வாறில்லாது பல பொய்யான வேலைத்திட்டங்கள் இந்த அரசாங்கத்தில் உள்ளது.


கேள்வி : அரசாங்கத்திலுள்ள தவறுகளால் ஆட்சி அதிகாரத்தை பிரதமர் பதவியேற்க வேண்டும் எனக் கூறியுள்ளீர்கள். அவ்வாறாயின் ஜனாதிபதியை பதவி விலகவேண்டும் என்றா கூறுகின்றீர்கள்?


பதில் : ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தேவையில்லை. ஜனாதிபதி தன் பதவியில் இருக்கும் அதேவேளை, நாட்டை ஆட்சிசெய்யும் அதிகாரத்தை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவமே இல்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே சிறந்த அரசியல் அனுபவமுள்ளது.
நாட்டை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி எவ்வளவு முயற்சி செய்தாலும் அரசியல் அனுபவமில்லாததால் அது சாத்தியமற்றது. ஆகவே, ஜனாதிபதி தன்னுடைய பதவியிலிருக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் ஆட்சி மற்றும் நிர்வாக அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கவேண்டும்.

கேள்வி: நீங்கள் கூறுவது போன்று பிரதமருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு 20ஆவது திருத்தம் இடமளிக்காதே?


பதில் : 20ஆவது திருத்தத்தினாலேயே நாடு இன்று சீர்குலைந்துள்ளது. அண்ணா பிரதமராக இருக்கும்போது, தம்பியிடம் ஆட்சி அதிகாரம் இருக்கின்றது. இந்த அதிகாரத்தை அண்ணாவும் தம்பியும் பகிர்ந்துகொண்டு செயற்பட முடியும்.


கேள்வி : அவ்வாறு அதிகாரத்தை பகிரும்போது அது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாக அமையுமல்லவா?


பதில் : அரசியலமைப்பை தற்போது எங்களால் மாற்றமுடியாது. ஆனால், 23 பலத்தைக்கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு அரசியலமைப்பை மாற்றியமைக்கும் அதிகாரமும் இருக்கின்றது.கடந்த ஆட்சியில் ஜனாதிபதி மைத்ரியும் பிரதமர் ரணிலும் இருவேறு பக்கத்திற்குச் சென்றமையினாலேயே பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது அண்ணாவும் தம்பியும் அதிகாரத்தில் இருக்கும்போது இருவேறு பக்கத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை.

நிர்வாக மற்றும் ஆட்சி அதிகாரத்தை பிரதமரிடம் கொடுத்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட முடியும். இதனால் எவ்வித பாதிப்பு ஏற்படாது.

கேள்வி : நீங்கள் கூறுவதுபோல் ஒருவேளை, நிர்வாக மற்றும் ஆட்சி அதிகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கினால் சீர்குலைந்துள்ளதாக கூறும் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமா?


பதில் : மஹிந்த ராஜபக்ஷவிடமே சிறந்த அரசியல் அனுபவமுள்ளது. அதனைக்கொண்டு அவரால் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும். மஹிந்த ராஜபக்ஷவிற்காகவே அதிக மக்கள் இந்த அரசாங்கத்துடன் இருக்கின்றனர். வேறு யாருக்காகவும் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்கவில்லை.

69 இலட்சம் வாக்குகளும் அவருக்காக கிடைத்தவை. தற்போதைய ஜனாதிபதிக்கு ஒரு வாக்கேனும் கிடைக்கவில்லை.

மேலும், இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள 11 பங்காளிக் கட்சிகளுமே தற்போது அதிருப்தியில் உள்ளன. அவர்கள் தற்போது பல்வேறு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

கேள்வி : உங்களுடன் இந்த அரசிலுள்ள யாரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனரா?


பதில் : எங்களுடன் யாரும் பேசுவதற்கு தயாராக இல்லை. நாங்கள் அழைப்பு விடுத்தால் கூட எங்களுடைய தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில்லை. அவ்வாறு யாரும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் நேரடியாகவே கூறுவோம்.


கேள்வி : அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை நிவர்த்திசெய்ய என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?


பதில் : மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் மக்களுக்காகவே செயற்பட வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு கொரோனா என்ற ஒன்றினால் மாத்திரம் பொருளாதார வீழ்ச்சிஏற்பட்டது. ஆனால், இந்தியாவில் தற்போது கொரோனா என்பதே இல்லையென்பது போலுள்ளதே. அவர்கள் சிறப்பாக நாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனரே. கொரோனா கொரோனா எனக் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாட்டை முன்னெடுத்துச் செல்லவேண்டும். மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளனர்.


மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும் என்றால் அதுமஹிந்த ராஜபக்ஷவால் மாத்திரமே முடியும்.

கேள்வி : இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேசியுள்ளீர்களா?


பதில் : ஆம். நான் இருவரிடமே பேசுகின்றேன். ஜனாதிபதியுடன் தொடர்ந்து பேச முடியாவிட்டாலும் பிரதமருடன் நான் தொடர்ந்து பல முறை பேசியுள்ளேன். எனினும், அவர்கள் அருகில் தவறான ஆலோசனைகளும் வேலைகள் செய்யமுடியாதவர்களுமே இருக்கின்றனர். அதனால் நாங்கள் பேசுவதால் மாத்திரம் எதுவும் மாறிவிடுவதில்லை.

கேள்வி : இராணுவ நிர்வாக நிலைப்பாட்டிலிருந்து செயற்படுவதனாலேயே நாடு சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுகின்றதே?


பதில் : நாடு தற்போதும் சீர்குலைந்தே உள்ளது. முறையான நிர்வாகம் இல்லாதமையினால் டொலர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவ்வாறாயின் முறையான நிர்வாக அதிகாரிகள் குழுவொன்று அவசியமாகும். மேலும், ஜனாதிபதிக்கு சிறந்த ஆலோசனை வழங்குவதற்கும் சரியானவர்கள் இல்லை. இதுவே, நாடு சீர்குலைய காரணமாகியுள்ளது. ஆலோசகராகவுள்ள ஜயசுந்தர தவறான ஆலோசனைகளையே வழங்குகின்றார்.


கேள்வி : நிர்வாக மற்றும் ஆட்சி அதிகாரத்தை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறியுள்ளீர்களா?


பதில் : ஆம். கூறினேன். ஆனால், அதற்கு அவர் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. அவரால் ஜனாதிபதியாக முடியாது. குறைந்தது மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையை பெற்று நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகவுமுள்ளது.


கேள்வி : நீங்கள் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் அதனாலேயே இவ்வாறு அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் கூறப்படுகின்றதே?


பதில் : எனக்கும் சீனவுக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. நான் ஒரு முறைகூட சீனாவுக்குச் சென்றதில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க முடியும். நாங்கள் எங்களுடைய நாட்டின் நன்மைக்காகவே செயற்படுகின்றோம்.


கேள்வி : மின் நிலையங்கள், எண்ணெய்த்தாங்கிகளை வெளி நாடுகளுக்கு வழங்கும் இந்த அரசாங்கத்தின் கொள்கை குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?


பதில் : இந்த கொள்கைக்கு நாங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றோம். நாட்டுக்குச் சொந்தமான எந்தவொரு சொத்தையும் வெளிநாட்டுக்கு வழங்கவேண்டாம் என்றே நாங்கள் கூறுகின்றோம். எனினும், அதனை இந்த அரசாங்கம் கேட்காதமையினாலேயே மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனை மீண்டும் சரிசெய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும்.


கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்தில் இருந்தவராகவும் மஹிந்த ராஜபக்ஷ மக்களுடன் இருந்தவராகவும் இருப்பதால் அவராலேயே மக்களின் நம்பிக்கையை மீள பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதியை பதவி நீக்க வேண்டும் என்று கூறவில்லை. மக்களின் நலனுக்காக பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும் என்றே கூறுகின்றோம்.


கேள்வி : ஏப்ரல் தாக்குதல் குறித்து இந்த அரசாங்கத்தின் விசாரணைகளில் உங்களுக்கு திருப்தியுள்ளதா?


பதில் : கர்தினால் ஆண்டகை ஏப்ரல் தாக்குதல் குறித்து அடைந்துள்ள அதிருப்தியை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.


இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளில் எவ்வித திட்டமிடலுமில்லை. சாதாரண மக்கள் எதிர்பார்க்கும் நீதியை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் விசாரணைகளில் எங்களுக்கு எவ்வித திருப்தியுமில்லை.

கேள்வி : மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக பேசப்படுகின்றது குறித்து உங்களுடைய நிலைப்பாடு?


பதில் : நாட்டில் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சாப்பிடுவதற்குக்கூட வசதியில்லாதபோது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது. தேர்தல் நடத்துவதற்கு அதிக பணம் தேவைப்படும். ஆனால், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கே நிதியில்லை. அவ்வாறாயின் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதியிருக்குமா? அத்தோடு, எமது நாட்டுக்கு மாகாண சபை பொருத்தமற்றது. அது எமக்கு தேவையில்லாதது.


கேள்வி : வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் நோக்கத்திலேயே மாகாண சபைத் தேர்தல் கொண்டுவரப்பட்டது. அதனை இல்லாதொழித்தால் அது அவர்களுக்கு பாதிப்பாக அமையாதா?


பதில் : தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லையே. அவ்வாறு அவர்களுக்கான தீர்வு கிடைத்திருந்தால் அவர்கள் துப்பாக்கிகளை கையில் ஏந்தியிருக்கமாட்டார்கள். ஆகவே, தமிழ் மக்கள் எதிர்பார்த்த எவ்வித தீர்வும் மாகாண சபையால் நிறைவேற்றப்படவில்லை.


தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரும் சமாதானத்துடன் வாழவேண்டும். நாங்கள் பிரிந்திருப்பதால் எவ்வித பலனையும் பெற முடியாது. ஒற்றுமையாக இருந்தாலே எங்களால் வெற்றிபெற முடியும். எனினும், மாகாண சபையால் எங்களுக்கு எவ்வித பயனுமில்லை.


கேள்வி : மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்திருக்கலாமல்லவா?


பதில் : ஆம். இந்தியா எப்போதும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுப்பது சாதாரண விடயம். எனினும், இம்முறை இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். எனினும், தனிப்பட்ட ரீதியில் மாகாண சபை எங்களுக்கு பொருத்தமற்றது.


கேள்வி : அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன?


பதில் : மக்கள் வாழ்வதற்கான உரிமையை கொடுக்கவேண்டும். ஆனால், மக்கள் வாழ்வதற்கு முடியாதவாறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பால்மா இல்லை. ஆகவே, முதலில் மக்கள் வாழ்வதற்கான வாய்ப்பைகொடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »