(எம்.எப்.எம்.பஸீர்)
அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட – ஷ்ரவஸ்திபுர பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது ஒன்றரை மாத குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (10) பகல் வேளையில், பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த தாய், தனது ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையை இவ்வாறு வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குழந்தையை கொலை செய்த பின்னர், குறித்த தாய், கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும், அங்கு வைத்து அவரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சரணடைந்த தாய் விசாரணைகளுக்காக அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.