Our Feeds


Friday, October 1, 2021

Anonymous

அடம் எக்ஸ்போ உள்ளிட்ட 9 நிறுவனங்களின் உரிமையாளர் ஹுசைனின் மரணம்: இளைய மகன் அஸ்கரின் விளக்கமறியல் நீடிப்பு

 



(எம்.எப்.எம்.பஸீர்)


அடம் எக்ஸ்போ உள்ளிட்ட 9 நிறுவனங்களின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது இளைய மகனின் விளக்கமறியல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இவ்வாறு விளக்கமறியல் காலத்தை இன்று (01) நீடித்தார்.

பிரபல வர்த்தகரான அலி அஸ்கர் கபீர் குலாம் ஹுசைன் என்பவருடைய விளக்கமறியல் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டது.

பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைனின் மரணம் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு வந்தது.

இதன்போது, கடந்த தவணையில், சந்தேக நபரின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ முன் வைத்திருந்த வாதங்கள் தொடர்பில் பதிலளிக்க சிஐடி.தவறியது.

பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைனை கொலை செய்ய சந்தேக நபரான அவரது இளைய மகன் தன்னுடன் இணைந்து சதி செய்ததாக ஒருவர் சிஐடிக்கு வாக்குமூலமளித்துள்ள நிலையில், அவ்வாறு வாக்குமூலம் வழங்கியவரை சாட்சியாக சிஐடி பெயரிட்டுள்ள நிலையில், அவர் சந்தேக நபராக நீதிமன்றில் அஜர் செய்யப்படவேண்டியவர் என ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ வாதம் செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த நபரின் முழுமையான சாட்சியத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் கடந்த தவணையில் உத்தரவிட்டிருந்தபோதும், இன்று அது சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே எதிர்வரும் 8 ஆம் திகதி அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டது. அதன்படி அதுவரை சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »