Our Feeds


Tuesday, October 26, 2021

ShortNews Admin

இலங்கையில் 60 வீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தரமான ஊட்டத்சத்துள்ள உணவு கிடைக்கவில்லை - ஆய்வில் தகவல்



இலங்கையில் கொவிட்19 தொற்றுப்பரவல் காலத்தில் 60 வீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தரமான, ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கவில்லையென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உணவு உரிமை தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் FIAN Sri Lanka நிறுவனத்தினால் 10 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


FIAN Sri Lanka உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணமும் ஆய்வறிக்கை வெளியீடும் கடந்த வாரம் நிகழ்நிலையில் இடம்பெற்றது. இதன்போது ஆய்வுகள் குறித்த தரவுகள் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் லக்ஷி கொடிதுவக்குவினால் வெளியிடப்பட்டன.

2020ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் நகர்ப்புறம், கிராமப்புறம், மத்திம கிராமப்புறம், பெருந்தோட்டம் ஆகிய மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவு கள் குறித்த கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டன.

அதனடிப்படையில் 486 பேரிடம் நேரடியாக வும், எழுத்துமூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் பெற்றுக்கொள்ளப்பட்ட தகரவுகளில் 60 வீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தரமான, ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கவில்லையென தெரியவந்துள்ளது.

மேலும், கொவிட்19 தொற்றுப்பரவல் காலத்தில் 71 வீதமானோர் குறைந்த விலையுடைய உணவுகளையும் 69 வீதமானோர் வாராந்தம் ஐவேளை உணவை மாத்திரமே எடுத்துக்கொண்டுள்ளனர். அத்துடன், 17 வீதமானோர் வாரத்தில் ஓரிரு நாட்கள் உணவின்றி இருந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் மக்களின் செலவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 16 வீதமான மக்கள் மருத்துவச் செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளனர். நாற்பத்தைந்து வீதமானோர் தமது பிள்ளைகளின் கல்விச் செலவை குறைத்துக்கொண்டுள்ளனர். மேலும், 57 வீதமானார் கடன் பெற்றுக்கொண்டுள்ளதுடன்,4 வீதமானோர் வீட்டு உபகரணங்களை விற்பனை செய்துள்ளதுடன், 3 வீதமானோர் வீடு அல்லது காணியை விற்பனை செய்துள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றுப் பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 11.9 வீதமானோர், தொற்று எவ்வாறு ஏற்பட்டதெனத் தெரியாது என பதிலளித்துள்ளனர். 17.1 வீதமானோருக்கு குடும்ப உறுப்பினர்களாலும் 42.8 வீதமானோருக்கு வேலைத்தளங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. மேலும் 11.1 வீதமானோருக்கு நிகழ்வுகளில் பங்கேற்றதன் காரணமாகவும் 20.1 வீதமானோருக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியதன் காரணமாகவும் 24.3 வீதமானோருக்கு பொது இடங்களில் நடமாடியதன் காரணமாகவும் தொற்று பரவியுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் ஒன்லைன் ஊடாகவே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறு 45 வீதமான மாணவர்களுக்கு மாத்திரமே ஒன்லைன் கல்வி கிடைத்ததாகவும் 55 வீதமான மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வி கிடைக்கவில்லையென்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஒன்லைன் கல்வியைப் பொறுத்தவரையில் புத்தளம் மாவட்டத்தில் 90 வீதமான மாணவர்கள் அதில் பங்கேற்றுள்ளனர். நுவரெலியாவில் 28 வீதமான மாணவர்களும் மட்டக்களப்பில் 19 வீதமான மாணவர்களும் பதுளையில் 9 வீதமான மாணவர்களும் மாத்திரமே ஒன்லைன் கல்வியில் ஈடுபட்டுள்ளனர் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நிகழ்வில் பங்கேற்ற சிரேஷ்ட உளநல வைத்திய நிபுணர் கமல் வல்கம கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள உளநலம் சார்ந்த பிரச்சினைகளை எடுத்துக்கூறினார்.

“தற்போது உளநலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகள்முதல் முதியோர்வரை பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆய்வறிக்கையின் பிரகாரம் பெரும் எண்ணிக்கையிலானோருக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பொருளா தார சிக்கல்களுடன் உணவைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சவால்களும் உளநலம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றன” என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுதாய வைத்திய நிபுணர் முரளி வள்ளிபுரநாதன் தமது கருத்துகளை பதிவுசெய்தார்.

“அரசாங்கம் கொவிட்19 ஐ கட்டுப்படுத்துவதற்கு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறிவிட முடியாது. கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் குடும்ப வன்முறை மிக அதிமாகக் காணப்பட்டது. மதுபாவனையை கட்டுப்படுத்தாமல் அதனை மறைமுகமாக ஊக்குவித்ததன் காரணமாகவும் வீட்டு வன்முறைகள் நிகழ்ந்தன. கொலைகள் கூட இடம்பெற்றன. கொரோனாவை கட்டுப் படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வியின் ஒரு பகுதியைாக இதனைச் சொல்லாம்” என்றார். மேலும், நாட்டின் பல்வேறு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் உரைநிகழ்த்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »