Our Feeds


Friday, October 1, 2021

Anonymous

பள்ளிகளில் 25 பேர் மட்டுமே தொழ வேண்டுமென கூறுவதற்கு வக்பு சபைக்கு அதிகாரம் வழங்கியது யார்? கல்முனை மேயர் கேள்வி

 



(அஸ்லம் எஸ்.மௌலானா)


பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகளுக்கு தடை விதிப்பதற்கும் 25 பேர் மட்டுமே தனித்தனியாக தொழுகையில் ஈடுபட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதற்கும் வக்பு சபைக்கு அதிகாரம் வழங்கியது யார் என்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்ப்பட்டுள்ளதையடுத்து, வணக்கஸ்தலங்கள் யாவும் திறக்கப்படும் நிலையில், பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகை உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி இல்லை எனவும் தனித்தனியாகத் தொழுவதற்கு எந்த நேரத்திலும் 25 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை வக்பு சபை பணிப்புரைக்கமைவாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான சுகாதார வழிகாட்டல் என்ற போர்வையில் வக்பு சபை இவ்வாறு சுற்றறிக்கை வெளியிட்டிருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

நாடு திறக்கப்பட்டு, அனைத்து கருமங்களும் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், பள்ளிவாசல்களை மாத்திரம் தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனைக் கருத முடிகிறது.

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக ஆட்களை ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறாயின் சுகாதார நடைமுறைகளைப் பேணி ஒவ்வொரு பள்ளிவாசல்களின் கொள்ளளவுக்கேற்ப ஒரே நேரத்தில் அரைவாசிப் பேராவது ஏன் தொழுகையில் ஈடுபட முடியாது என்ற கேள்வி எழுகிறது. மேலும், எந்த அடிப்படையில் வக்பு சபை இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கிறது எனவும் தெளிவுபடுத்த வேண்டும்.

நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் நாடு தழுவிய ரீதியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மட்டத்தில் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்குமே இவை தொடர்பான அதிகாரம் இருந்து வருகின்ற நிலையில், இல்லாத அதிகாரமொன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, தேவையற்ற சுற்றறிக்கைகளை வெளியிட்டு, முஸ்லிம் மக்களை தொடர்ந்தும் ஒரு பீதியான மனப்பாங்கில் வைத்திருக்கும் இத்தகைய அழுத்தமான செயற்பாடுகளில் இருந்து வக்பு சபை உடனடியாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனைய மதஸ்தலங்களில் இவ்வளவு பேர்தான் வணக்கங்களில் ஈடுபட முடியும் என பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ சமய திணைக்களங்களோ அறநெறி சபைகளோ கட்டுப்பாடுகளை விதிக்காத நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை என்பன மாத்திரம் தொடந்தேர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்து முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியும் விசனமும் ஏற்பட்டிருப்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »