ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற ஆளுங்கட்சி எம் பிக்கள் கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ச உட்பட்ட 21 எம் பிக்கள் கலந்துகொள்ளவில்லையென தெரிகிறது.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை 5.30 முதல் இந்த கூட்டம் நடந்தது. அரசுக்குள் அண்மைக்காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் அமைச்சர் விமல் உட்பட்ட 21 எம்பிக்கள் இதில் கலந்துகொள்ளாமை அரச உயர்மட்டத்திற்கு கடும் விசனத்தை உண்டுபண்ணியுள்ளதாக அறியமுடிந்தது.
இன்றைய கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , தேர்தல்காலத்தில் தாம் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த திட்டங்களையே தற்போது செயற்படுத்திவருவதாகவும் , 69 லட்ச மக்களின் எண்ணங்களையே தாம் பிரதிபலித்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்குள் கருத்துவேறுபாடுகள் இருப்பது நியாயமானது என்றும் அவற்றை மேலும் வளர்க்காமல், வெளியே கொண்டுசெல்லாமல் உள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமென்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளாரென அறியமுடிந்தது.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் வரவுள்ளதால் அனைத்து எம் பிக்களும் அந்த நாட்களில் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டியதன் அவசியமும் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (தமிழன்)