Our Feeds


Friday, October 29, 2021

Anonymous

ஹிஜாஸுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கக்கோரி 18 மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டேன்: நிறுவன ஊழியர் கோட்டை நீதிவானிடம் அதிகாரிகளின் பெயரையும் கூறி முறைப்பாடு!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கக்கோரி தொடர்ச்சியாக தான் சித்திரவதை செய்யப்பட்டதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கோட்டை நீதிவானிடம் திறந்த நீதிமன்றில் முறையிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர், கோட்டை நீதிமன்றின் விசாரணையின் கீழ் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டல் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்குக் கோவையின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ள கைதி ஒருவரே இதனை நீதிவானிடம் திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

‘சேவ் த பேர்ள்’ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் கடமையாற்றிய நிலையில், பயங்கரவத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுல்தான் எனும் கைதியே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நபர், கடந்த 2020 மே 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் முதலில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்ளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தடுப்புக் காவல் உத்தரவில் கைதி ஒருவரை பொலிஸ் பொறுப்பில் வைத்திருக்க முடியுமான உச்ச வரம்பான 18 மாதங்கள் வரை அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 27 ஆம் திகதி கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது, சந்தேக நபருக்காக சட்டத்தரணிகளான நிரான் அங்கிடெல், கனேஷ் யோகன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் ஆஜராகியது.

இதன்போதே திறந்த மன்றில், சந்தேக நபரான சுல்தான் நீதிவானிடம் தன் மீதான சித்திரவதைகள் தொடர்பில் முறையிட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கக்கோரி தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அதனால் தன்னால் தற்போது நிமிர்ந்து நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை தொடர்ச்சியாக சித்திரவதை செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் பெயர்களையும் அவர் நீதிவானிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபருக்காக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது சேவை பெறுநர் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபட்டமைக்கான எந்த தகவலும் பொலிஸாரின் அறிக்கையில் இல்லாமையால் அவரை விடுவிக்க வேண்டும் என கோரினர்.

அத்துடன் கடந்த 18 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் வழக்கு ஒன்றை முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பதைக் கூட அதிகாரிகள் கூறாமல் இருப்பது நியாயமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே, சந்தேக நபருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்ப்பார்க்கப்படுகிறதா இல்லையா என்பதை சட்ட மா அதிபரிடமும் கலந்தாலோசித்த பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »