Our Feeds


Saturday, October 2, 2021

Anonymous

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு 125,500 ரூபாய் அபராதம்! - நீதி மன்றத்தில் வெளிப்பட்ட காரணம்.

 



மதுபோதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு ஒரு இலட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார்.


யாழ்ப்பாணம் கொழும்புத் துறையைச் சேர்ந்தவர் குறித்த நபர் இன்று நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டார்.

அவர் மீது 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குற்றப்பத்திரத்தை பொலிஸார் தாக்கல் செய்தனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, வரிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாதவரை பின் இருக்கையில் இருத்தி அழைத்துச் சென்றமை மற்றும் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

எதிரி தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.

அதனால் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதமும் ஏனைய 4 குற்றங்களுக்கு 50 ஆயிரத்து 500 ரூபாயும் தண்டப்பணமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »