Our Feeds


Tuesday, October 5, 2021

ShortNews Admin

04/21 தற்கொலைத் தாக்குதல் வழக்கின் முக்கிய பிரதிவாதி நௌபர் மௌலவி நீதிமன்றில் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை



ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், நவ்பர் மௌலவி எனப்படும் இப்றாஹிம் மொஹமட் நவ்பர் உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று (04) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதிகள் குழாம் முன்னிலையில், இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கு, நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ள, வழக்கின் 15 ஆவது பிரதிவாதியான மொஹமட் ஹனீபா செய்நுள் ஆப்தீன் என்பவர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியான நவ்பர் மௌலவி உள்ளிட்ட 10 பேர் சார்பில், சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில் தங்கள் சார்பில் முன்னிலையாக, தமிழ்மொழி அறிந்த சட்டத்தரணி ஒருவரை அரசாங்க செலவில் நியமிக்குமாறு அந்தப் பிரதிவாதிகள் மன்றில் கோரியுள்ளனர்.

இதற்கமைய பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாவதற்காக தமிழ்மொழி அறிந்த சட்டத்தரணிகளின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்குப் பணித்துள்ளது.

இதேநேரம், சிங்கள மொழியில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தின், தமிழ்மொழியாக்கத்தை பெற்றுக்கொடுக்குமாறு, வழக்கின் பிரதான பிரதிவாதியான நவ்பர் மௌலவி உள்ளிட்ட 17 பிரதிவாதிகள் மன்றில் கோரியுள்ளனர்.

அத்துடன், குற்றப்பத்திரத்தை தமக்கு ஆங்கில மொழியாக்கத்தில் வழங்குமாறு மொஹமட் அக்ரம் என்ற பிரதிவாதி மன்றில் கோரியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த மொழியாக்கங்களை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நீதிபதிகள் குழாம் மனுதாரர் தரப்புக்கு பணித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »