(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கில் நேற்று (4) குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது. பிரதான பிரதிவாதியாக அரச தரப்பால் அறிமுகப்படுத்தப்படும் அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி உட்பட 24 பேருக்கு எதிராகவே இவ்வாறு நேற்று குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பேரில் 15 ஆவது பிரதிவாதியான அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுல் ஆப்தீன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்படவில்லை. அதனால் அவருக்கு மட்டும் நேற்று குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவில்லை.
வழக்கு விசாரணை ஆரம்பம் :
இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையிலேயே இந்த வழக்கு இவ்வாறு விசாரணைக்கு வந்தது.
பாதுகாப்பு பலப்படுத்தல்:
கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு முன்னொருபோதும் இல்லாதளவில் பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றுக்கு உள்நுழையும் பிரதான பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையில், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் 3 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஸ்தலத்திலிருந்து பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்தனர்.
குறிப்பாக, வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள்நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனை செய்யப்பட்ட பின்னரேயே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
24 பேர் மன்றில் ஆஜர்
இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைச்சாலைகளிலிருந்து 24 பேர் மட்டுமே அழைத்து வரப்பட்டனர். ஒருவருக்கு கொவிட் -19 தொற்று உறுதியானதாக பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
குற்றப் பத்திரிகை கையளிப்பு:
இந்நிலையில் நீதிமன்றில் குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டன. 23 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கள் அதில் அடங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அவற்றை முழுமையாக எடுத்துச் செல்ல முடியாதோருக்கு, அவற்றை நீதிமன்றிலிருந்து எடுத்துச் செல்ல பிரதிவாதிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாக தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த திறந்த மன்றில் அறிவித்தார்.
14 பிரதிவாதிகளுக்கு மட்டும் சட்டத்தரணிகள் ஆஜர்:
குற்றப்பத்திரிகை கையளிக்கப்படும்போது நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில், 14 பிரதிவாதிகளுக்காக மட்டுமே சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், சட்டத்தரணிகளான சுனங்க பெரேரா, ஜி.ஏ. கருணாசேகர, பாஹிம் உள்ளிட்ட 6 சட்டத்தரணிகள் பிரதிவாதிகளுக்காக ஆஜராகினர். 11 ஆவது பிரதிவாதிக்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கசுன் லியனகே எனும் சட்டத்தரணி ஆஜரானதுடன் சட்டத்தரணிகள் ஆஜரான பிரதிவாதிகளின் எண்ணிக்கையில் அதுவும் உள்ளடங்குகிறது.
நெளபர் மெளலவிக்கு சட்டத்தரணிகள் இல்லை:
இந்நிலையில் பிரதான பிரதிவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட நெளபர் மெளலவி, NTJ யின் ஆயுதப் பிரிவை வழி நடத்தியதாக கூறப்பட்ட மில்ஹான் உள்ளிட்டவர்களுக்காக எந்த சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. சட்டத்தரணிகள் ஆஜராகாத பிரதிவாதிகள் அனைவருக்கும் அரசின் செலவில் சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பில் விருப்பமா எனவும் இல்லையேல் கட்டணம் செலுத்தி சட்டத்தரணிகளை நியமிக்க சந்தர்ப்பம் வேண்டுமா எனவும் தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த நீதிமன்ற உரை பெயர்ப்பாளரின் ஊடாக பிரதிவாதிகளிடம் வினவினார்.
இதன்போது பிரதிவாதிகள் ஒவ்வொருவராக, தமக்கு தமிழ் தெரிந்த சட்டத்தரணி ஒருவரை அரசாங்க செலவில் நியமிக்குமாறு கோரினர்.
இந்நிலையில், முழுமையாக சிங்கள மொழியில் இருந்த குற்றப் பத்திரிகை தொடர்பிலும் தலைமை நீதிபதி பிரதிவாதிகளிடம் வினவினார்.
அதன்போது, 7 பிரதிவாதிகளைத் தவிர ஏனைய 17 பிரதிவாதிகளில் 16 பேர் தமக்கு குற்றப் பத்திரிகை தமிழில் வேண்டும் எனவும் 25 ஆவது பிரதிவாதியான மொஹம்மட் அக்ரம் அஹக்கம் தமக்கு ஆங்கில மொழியில் குற்றப்பத்திரிகை வேண்டும் எனவும் கோரினர்.
இதனையடுத்து, பிரதிவதிகள் சார்பில் ஆஜராவதற்காக தமிழ் தெரிந்த சட்டத்தரணிகளின் பட்டியல் ஒன்றை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸுக்கு, நீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன் பிரதிவாதிகள்கோரும் குற்றப் பத்திரிகையின் தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சட்ட மா அதிபர் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் தரப்பு:
நேற்றைய தினம் இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவரைக் கொண்ட குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியாவின் உணர்வுபூர்வமான வாதம்:
பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொல்சிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, வழக்குடன் தொடர்புபட்ட விடயங்களை உணர்வு பூர்வமாக மன்றில் முன்வைத்தார்.
‘ இன்று இந்த நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 25 பேரில், 24 பேருக்கு அவை கையளிக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பில் சிறு ஞாபகமூட்டல் ஒன்றைச் செய்ய வேண்டும்.
கிறிஸ்தவர்களின் புனித தினங்களில் ஒன்றான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய, கொழும்பு – கொச்சிக்கடை, மட்டக்களப்பு சியோன் தேவாலயங்களுக்கு புதிய உடைகளை உடுத்துக்கொண்டு தமது பெற்றோரின் கைகளில் தொங்கிய வண்ணம் சென்ற சிறார்கள் ஒருபோதும் தாம் மீண்டும் திரும்பமாட்டோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.
தமது பிள்ளைகளின் எதிர்க்காலத்துக்காக கடவுளிடம் மன்றாட சென்ற பெற்றோர்கள், தாம் மன்றாடும் ஒளிமயமான எதிர்க்காலம் அவர்களை விட்டு நிரந்தரமாக சென்றுவிடும் என ஒரு கணமேனும் நினைத்திருக்க மாட்டார்கள்.
கடவுளை வணங்க சென்ற தமது சகோதர, சகோதரிகளை அடையாளம் காணாமல், உடற்பாகங்களையே காண நேரிடும் என உறவுகள் ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பே இல்லை. கடவுளை வணங்க சென்ற தமது உறவுகள் கொல்லப்பட்டதால், அவர்களிடம் தமது உறவுகள் தொடர்பிலான நினைவுகளும் பயங்கரவாதம் தொடர்பிலான கொடூரமும் மட்டுமே எஞ்சியிருக்கும்.
ஆம், இந்த நிலைமை மிகப் பயங்கரமானது. கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மத அடிப்படைவாத குழுவொன்று 8 இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியது. இவ்வாறான ஒரு விடயம் இலங்கையில் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்நிலைமை மிக மிலேச்சத்தனமானதாக இருந்தது.
2019 ஏப்ரல் 21 கிறிஸ்தவர்களின் முக்கிய நாள். அன்று அடிப்படைவாதிகள் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. சிரமத்துடன் இலங்கையில் கட்டியெழுப்பட்ட சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவத்தையும் சேர்த்து ஒரே நொடியில் பறித்துவிட்டனர்.
இந்த அடிப்படைவாதிகள், தமது அடிப்படைவாதக் கருத்தை உலகுக்கு தெரியப்படுத்தவே, இந்த விஷேட நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்காக் கொண்டிருக்க வேண்டும்.
அடிப்படைவாத, பயங்கரவாத வலையமைப்பு பரந்துபட்டது. இந்த அடிப்படைவாதிகள் எந்த, மத, இன குழுவினரையும் சார்ந்தவர்கள் என நினைக்கவில்லை. இவர்கள் ஒரு மதத்தின் உண்மையான விடயங்களை திரிவுபடுத்தி அதனை பின்பற்றியவர்கள். எனவே இவர்களுக்கு என ஒரு மதம் இல்லை.
இவ்வாறான ஒரு சிலரின் அடிப்படைவாத நடவடிக்கைகளால் நாம் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவத்தை இன்று இழந்து நிற்கிறோம்.
இவையனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர் திணைக்களம் தயாரித்து முன்வைத்துள்ளது.
இந்த குற்றப் பத்திரிகை மிக விசேடமானது. இலங்கை வரலாற்றில் இதுவரை கேள்விப்படாதது. காரணம் 23,270 குற்றச்சாட்டுக்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 275 பேர் தொடர்பிலும் காயமடைந்த 586 பேர் தொடர்பிலும், அந்நிலைமைக்கு காரணமாணவர்கள் என பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றப் பத்திரிகையை முன்வைக்க, சிறந்த முறையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து விசாரணையாளர்களையும் அவர்களது திறமைகளையும் நான் மெச்சுகிறேன். சில விசாரணை மற்றும் சாட்சி பகுப்பாய்வுகளுக்காக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய குற்ற விசாரணையாளர்களின் உதவி கூட பெற்றுக் கொள்ளப்பட்டது.
இது மிக பரந்துபட்ட ஒரு விசாரணையாக அமைந்திருந்தது. குண்டு வெடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கண்டறிதல், வாகனங்களை கண்டறிதல், குண்டுதாரிகளும் பிரதிவாதிகளும் பதுங்கியிருந்த பாதுகாப்பு இல்லங்களை கண்டறிதல் உள்ளிட்ட பகுப்பாய்வு சாட்சித் தேடல்கள் முறைப்பாட்டாளர் தரப்புக்கு மிக்க சவாலக அமைந்தன.
நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சட்ட மா அதிபர் திணைக்களம் முழு மூச்சுடன் செயற்படும் நிலையில், அதன் பிரதிபலனாக கடும் உழைப்புக்கு மத்தியில் இத்தகைய பாரிய குற்றப் பகிர்வுப்பத்திரத்தை முன்வைக்க எமது திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையை பயங்கரவாதம் இல்லாத நாடாக மாற்ற, சட்ட மா அதிபர் திணைக்களம் எந்த எல்லைக்கும் சென்று செயற்பட தயார்.’ என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர குறிப்பிட்டார்.
இதனையடுத்து பிரதிவாதிகள் சிலர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் நீதிமன்றில் சில விடயங்களை சுட்டிக்காட்டினார்.
‘ இந்த விவகாரத்தில் சட்ட மா அதிபர் வரலாற்றில் பதிவாகும் வண்ணம் 23,270 குற்றச்சாட்டுக்கள் உள்ள குற்றப் பத்திரிகையை முன்வைத்துள்ளார். எனினும் இந்த பிரதிவாதிகள் அனைவரும் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் என தெரிந்தும் குற்றப் பத்திரிகையை தமிழில் முன்வைக்காதது சட்ட மா அதிபர் செய்துள்ள மிகப் பெரிய தவறாகும்.
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பில் எமக்கும் ஆழ்ந்த கவலை உள்ளது. எனினும் சட்ட மா அதிபர் சார்பில் அவர்களின் உயிரிழப்பு, காயங்களுக்கு காரணமானவர்கள் என வகுப்புக்களில் பங்கேற்றவர்கள் போன்றோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். எனினும், தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காது மக்கள் கொல்லப்படும் வரை பார்த்துக் கொண்டிருந்தோரே கொலையாளிகள். ‘ என நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மற்றொரு சட்டத்தரணி, பிரதிவாதிகளில் சட்டத்தரணிகள் இல்லாதவர்களுக்கு அடுத்த தவணை வரை சட்டத்தரணி ஒருவரை அமர்த்த சந்தர்ப்பம் வழங்குமறும், அதன் பின்னரும் சட்டத்தரணி ஒருவர் இல்லையேல் அவர்களுக்கு அரச செலவில் சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறும் கோரினார். அதற்கும் நீதிமன்றம் அனுமதித்தது.
இதனையடுத்து வழக்கில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவற்றை மன்றில் ஒவ்வொரு பிரதிவாதிக்கும் வாசித்துக் காட்ட முனைந்தால் குறைந்த பட்சம் அதற்கு மட்டுமே 6 மாதங்களாவது தேவைப்படும் என ட்ரயல் அட்பார் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த மன்றில் சுட்டிக்காட்டினார்.
எனவே ஒவ்வொரு பிரதிவாதிக்கும் தொடர்புடைய குற்றச்சாட்டை மட்டும் தேர்ந்தெடுத்து அப்பகுதியை மட்டும் அவர்களுக்கு வாசித்து காட்டுவது கால நேரத்தை மிச்சப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அவர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியவுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து இது குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு நடக்கும் ஒவ்வொரு நாளிலும் பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு முடியாத சூழலில் மின்னியல் தொழில் நுட்ப உதவியுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் அடுத்த தவணையில் 15 ஆவது பிரதிவாதியை நிதிமன்றில் ஆஜர் செய்யவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
இந்நிலையில், பிரதிவாதிகள் அனைவரும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்:
1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி 2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12. அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16. அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப்
18. ராசிக் ராசா ஹுஸைன்
19. கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20. செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22. அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்
நன்றி - மெட்ரோ