முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (14) செவ்வாய்க்கிழமை இரவு 8.15 முதல் 10.00 வரை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் பத்வாக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் நீதி அமைச்சருடனான இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அண்மையில் இது தொடர்பில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதில் மார்க்க ரீதியான பல விடயங்கள் பற்றியும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் நீதி அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது.
இதன் மூலம் சிறந்த பெறுபேறுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பிரயோசனமாக அமைய வேண்டும் என்றும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ஜம்இய்யா பிராரத்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.