உலகில் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
தோஹாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தலிபான்கள் சார்பில் அப்துல் கனி பராதர் பங்கேற்றார். ஆப்கானிலிருந்து படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டவரும் அவர்தான். தலிபான்களின் அரசியல் முகமாகவும் அவர் பார்க்கப்படுகிறார்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட தலிபான்களின் அரசில், உக்கு துணைப் பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டது.
டைம் வெளியிட்டுள்ள பட்டியலில் ‘ஆப்கானிஸ்தானின் வருங்காலத்தின் அச்சு’ என அப்துல் கனி பராதர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் பல்வேறு பிரிவுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. தலைவர்கள் என்ற பிரிவின் கீழ் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிய குறிப்புகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
அப்துல் கனி பராதரைப் பற்றிய குறிப்பை பாகிஸ்தான் பத்திரிகையாளர் அகமது ரஷீத் எழுதியுள்ளார். கடந்த ஓகஸ்டில் தலிபான்களுக்குக் கிடைத்த வெற்றி, பராதர் நடத்திய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கு மன்னிப்பு வழங்குவது போன்ற அனைத்து முக்கிய முடிவுகளையும் தலிபான் இயக்கத்தின் சார்பில் பராதரே எடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலிபான்களில் ஒப்பீட்டளவில் மிதவாதப்போக்கு கொண்டவர் அவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மேற்படி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.