Our Feeds


Sunday, September 19, 2021

Anonymous

SHORT_BREAKING: மீண்டும் 200 ரூபாவினால் அதிகரிக்கவுள்ள பால் மா ?



ஒரு கிலோகிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கும், பால் மா நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளளது.

ஒரு கிலோகிராம் பால்மா பக்கட் ஒன்றின் விலையை, 350 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என நேற்றைய (18) சந்திப்பில் பால் மா நிறுவன பிரதிநிதிகள், நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எனினும், சந்தை நிலைமை மற்றும் வரி அறவீடுகள் குறித்து நிதி அமைச்சர் மிக ஆழமாக ஆராய்ந்து, பால் மா பக்கட் ஒன்றின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.


உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பால் மாவின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பால் மா நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.


பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பால் நிறுவனங்கள் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும், அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்காத நிலையில், தமக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்துக்கொள்வதற்காக பால் மா விநியோகத்தை இடைநிறுத்தி வைக்க பால் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.


இந்த நிலையில், பால் மாவிற்கான தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவி வருகின்ற பின்னணியிலேயே, நிதி அமைச்சருடன், நேற்றைய தினம் (18) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


மாதமொன்றிற்கு சுமார் 6500 முதல் 7000 மெற்றிக் தொன் வரையான பால் மா நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதுடன், நாளொன்றிற்கு 200 மெற்றிக் தொன் பால் மா தேவைப்படுகின்றது.


இந்த நிலையில், ஒரு கிலோகிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை தற்போது 945 ரூபாவாக காணப்படுவதுடன், 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 380 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்றைய தினம் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, பால் மா பக்கட் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு வேறொரு பொருளை கொள்வனவு செய்வது தற்போது வர்ததகர்களினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.


400 கிராம் பால் மா பக்கட் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு, 5 யோக்கட்கள், வேறொரு பால் மா பக்கட், தேயிலை போன்ற பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »