Our Feeds


Sunday, September 19, 2021

Anonymous

PHOTOS: ஆழ்கடல் சுற்றிவளைப்புகள்: 507 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! - 16 பாகிஸ்தானியர்கள் கைது!



(எம்.எப்.எம்.பஸீர்)


சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் ஊடாக இலங்கைக்குள் கடத்தப்படும் போதைப்பொருட்களை கைப்பற்ற தெற்கு ஆழ் கடலில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 507 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றைக் கடத்திய 16 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திலிருந்து மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்ட, போதைப்பொருள் கடத்தல் குறித்த விசாரணைகள் தொடர்பில் அனுபவமிக்க பொலிஸ் பரிசோதகர் தாரக சுபோதவுக்கு கிடைத்த தகவலை மையப்படுத்தி, மட்டு. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, கடற்படையினரின் உதவியையும் பெற்று நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் கடத்தும் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.

ஏற்கனவே இந்த நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் ஒரு பகுதி கரைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில், நேற்று (18) மற்றொரு பகுதி ( சுமார் 170 கோடி பெறுமதி) கரைக்கு எடுத்து வரப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் ஒருவர் சுற்றிவளைப்பின் இடையே சுகயீனமடைந்து, கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்ட நிலையில், கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் சுற்றிவளைப்பில் பங்கேற்ற மற்றொரு உப பொலிஸ் பரிசோதகரும் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு, அதன் பின்னணி தொடர்பில் கைதான பாகிஸ்தானியர்கள் மற்றும் போதைப்பொருள் தொகையைப் பொறுப்பேற்று பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »