Our Feeds


Thursday, September 23, 2021

Anonymous

PHOTOS: 04/21 தாக்குதலின் மாஸ்டர் மைன்ட் யார்? - ஐ.நா வில் ஜனாதிபதி உரையாற்ற சென்ற நேரம் அமெரிக்கா வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷம்



(நா.தனுஜா)


உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதி கோரி, நேற்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப் பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் இரண்டாம் நாளான நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத்தலைவர்கள் முன்நிலையில் உரையாற்றினார்.


இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் சூத்திரதாரி யார் எனக் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி ஜனாதிபதி உரையாற்றிய அதே தினத்தில் ஐ.நா தலைமை அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள், பல்வேறு கோஷங்களையும் எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான சதித்திட்டத்தை வகுத்தது யார்?, ஹு இஸ் மாஸ்ட்டர் மைன்ட்? (தாக்குதல்களின் சூத்திரதாரி யார்?), உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையைப் பகிரங்கப்படுத்துங்கள், சூத்திரதாரிகள் வெளியே இருக்கின்றார்கள்: இலங்கை ஆபத்தில் இருக்கின்றது, நீதியை நிலைநாட்டுங்கள்' என்பன உள்ளடங்கலாக நீதியை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.


அதுமாத்திரமன்றி 'சட்டமாதிபரால் கூறப்பட்ட சூழ்ச்சி என்ன?, நீதிக்காக இலங்கை காத்திருக்கின்றது, அப்பாவிகளைக்கொன்று நீங்கள் வெற்றியடைந்துவிட்டீர்களா?, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், உண்மையை வெளிப்படுத்த வேண்டியது உங்களுக்குரிய கடப்பாடாகும்' என்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »