Our Feeds


Monday, September 20, 2021

Anonymous

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் - ஹாபிஸ் நஸீர் MP



மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர், கிழக்கு மாகண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி பிரதம செயலாளர் ஆகியோருடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கும் நோக்குத்துடன் கடந்த 2019 ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். 


இவ்வாறு பயிலுனர்களாக கடமையாற்றி வந்த 386 பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் ஆளணி அனுமதிக்கமைவாக தற்போது நிரந்தர அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பயிலுனர்கள் 185 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்களில் சுமார் 25 பேர் மாத்திரமே மாவட்டத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய ஆண் பெண் பட்டதாரிகளுக்கு மாவட்டத்திற்கு வெளியிலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 


மட்டக்களப்பு தற்போது நிரந்தர நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகளில் பெரும்பாலனவர்கள் பெண்களாவர். இவர்கள் தற்போது திருமணமாகி 


கைக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வெளி மாவட்டங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் இவர்களது குடும்பக கட்டமைப்பு சீர் குலைந்து குடும்ப வாழ்வு கேள்விக் குறியாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பட்டதாரி நியமனங்கள் சொந்த மாவட்டத்திற்குள் வழங்கப்படடுள்ளதுடன் அவர்கள் பயிலுனர்களாக கடமையாற்றிய அலுவலகங்களிலேயே பெரும்பாலும் நிரந்தர நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு மாத்திரம் வெளி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்  நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனமானது ஏற்கனவே கிழக்கு மாகாணத்திலுள்ள  அபிவிருத்தி உத்தியோகர்களுக்கான பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்படவில்லை. மாறாக பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்நதர நியமனங்களை வழங்கும் நோக்கத்துடனேயே மத்திய அரசினால் இதற்கான அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது. எனவே வெற்றிடங்களை கருத்திற்கொள்ளாது பயிலுனர்களாகப் பணியாற்றிய அலுவலகங்களிலேயே நிரந்தர நியமனத்தை வழங்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.


எனவே, தற்போதைய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளை அவர்கள் பயிலுனர்களாக கடமையாற்றிய அலுவலகங்களிலேயே நிரந்தரமாக கடமையாற்றும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை உடனடியாக மாற்றிக் கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர், கிழக்கு மாகண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி பிரதம செயலாளர் ஆகியோருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »