Our Feeds


Sunday, September 26, 2021

Anonymous

எம்முடன் இருக்கும் முஸ்லிம் MPக்களுக்கு தலா 10 கோடி ஒதுக்கவுள்ளோம் - அமைச்சர் விமலவீர



(ஏ.எல்.எம்.ஷினாஸ்)


ராஜபக்க்ஷ அரசாங்கம்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும், காசு தர வேண்டும். ஆனால் தேர்தல் மட்டும் வந்தால் ராஜபக்க்ஷ வேண்டாம் சஜித் வாப்பாதான் வேண்டும் என தமிழ்-முஸ்லிம் மக்கள் எம்மை வெறுக்கின்றனர்.


உங்களுக்கு மூளை இருக்கிறதா? என வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன வள மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக முன்மொழியப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் (25) வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன வள மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் ஒருங்கிணைப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த அபிவிருத்திக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றும் போது, கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. காபட் வீதியை தந்தது யார்? இளைஞர்களுக்கு வேலைவாய்பை தந்தது யார்? வீடு தந்தது யார்? ராஜபக்க்ஷ அரசாங்கம் தான். நல்லாட்சி அரசாங்கம் உங்களுக்கு எதனை செய்தது? என்று கேள்வியெழுப்பினார்.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு என்ன செய்தது ஒன்றும் இல்லை. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 1,000 இலட்சம் ரூபா (10 கோடி ரூபா) வழங்கவுள்ளோம் அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்க்ஷ வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்கு பச்சத்தண்ணீரும் தரமாட்டார்கள்.

தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சி யுத்தத்தை ஆரம்பித்தவர்களும் அவர்கள்தான். நான் மாகாண கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ்-முஸ்லிம், சிங்களவர் என்று பார்க்காமல் 7,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கினேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கம் எதனை செய்தது? மைத்திரி ஒருபக்கம், ரணில் ஒருபக்கமாக நாட்டை குழப்பினார்கள். இறுதியில் தேசிய பட்டியல் ஊடாகவே உள்ளே வந்தார்கள்.

2022 ஆம் ஆண்டின் அபிவிருத்திப் பணிக்காக 29 கிராம சேவையாளர் பிரிவுக்கும் தலா 3 மில்லியன் ரூபா வீதம் 87 மில்லியன் ரூபா நிதி இந்த பிரதேசத்துக்கு ஒதுக்கவுள்ளோம். அபிவிருத்தி செய்ய நாம் வேண்டும் வாக்கு போட சஜித் வருவார். ஆண்டவா? முருகா? கடந்த முறை எமக்கு 7 வாக்கு மட்டுமே போட்டார்கள். எனக்கு வாக்கு போட சிங்களவர்கள் இருக்கிறார்கள். நீங்க போட வேண்டாம். ஆனால் காசு தருவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் வருவோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.ரபீக், அமைச்சரின் இணைப்பாளர் சாந்தலிங்கம் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலேந்திரன் உட்பட திணைக்களத்தின் தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »