Our Feeds


Monday, September 27, 2021

Anonymous

ISIS இன்டர்ஸ்கூல் என்ற பெயரில், வட்ஸ் அப் குழு: உளவுப் பிரிவு ஒன்றின் அறிக்கையினால் ஏற்பட்ட பரபரப்பு! - நடந்தது என்ன?



(எம்.எப்.எம்.பஸீர்)


‘இன்டர் ஸ்கூல்’ (interschool) எனும் பெயரில் வட்ஸ் அப் குழுவொன்று செயற்படுவதாகவும் அது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சொந்தமானது எனவும் மேல் மாகாண உளவுப் பிரிவினால் அறிவிக்கப்பட்ட விடயம் அடங்கிய அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.


மேல் மாகாண உளவுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமாரவினால் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அனுப்பட்ட கடிதமே இவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கு கசிந்துள்ளன.

அக்கடிதத்திலேயே, ‘ இன்டர் ஸ்கூல்’ எனும் பெயரிலான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் வட்ஸ் அப் குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்த குழுவில் இணையும் எவரும் மீள அதிலிருந்து விலக முடியாது எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டு விசேட விசாரணைகளும் கோரப்பட்டிருந்தன.

இந்த உளவுத் தகவல் கடந்த 23 ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பட்டுள்ளதுடன் 24 ஆம் திகதி வெள்ளியன்று அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அக்கடிதத்தில் இடப்பட்டுள்ள குறிப்புகள் ஊடாக தெளிவாகிறது.

எவ்வாறாயினும் குறித்த உளவுப் பிரிவின் கடிதத்தில் குறிப்பட்டுள்ள விடயங்கள் பொய்யானது என தேசிய உளவுச் சேவை ( எஸ். ஐ.எஸ்.) பாதுகாப்பு அமைச்சுக்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவித்துள்ளது. குறித்த கடிதத்தில் உள்ள வட்ஸ் அப் குழு தொடர்பிலான தகவல் 2017 ஆம் ஆண்டு முதல் உலா வரும் விடயம் எனவும், அதனை பொரளையில் உள்ள மேல் மாகாண உளவுப் பிரிவு மீள கடிதமாக அனுப்பியுள்ளதால் அக்கடிதம் சமூக வலைத் தளங்களுக்கு கசிந்துள்ளதன் பின்னணியில் வீண் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய உளவுத் துறை சுட்டிக்காட்டியுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையிலேயே இன்று (26) பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்ரய வெளியிட்டது.

அவ்வறிக்கையின் பிரகாரம், சமூக வலைத் தலங்களில் பகிரப்படும் அறிக்கை மேல் மாகாண உளவுப் பிரிவினரால் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டதுதான் என உறுதி செய்துள்ள பொலிஸ் தலைமையகம், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வட்ஸ் அப் குழு தொடர்பிலான விடயம் உறுதி செய்யப்பட்ட உண்மை தகவல் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அத்தகைய விடயம் ஒன்றினை சமூக வலைத் தளத்தில் பகிர்வது தண்டனை சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் தலைமையகம், இலங்கை பொலிஸார் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய எந்த தகவலாக இருப்பினும் அதனை பெற்று ஆராய்ந்து அவசியம் ஏற்படின் நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய அறிக்கை ஒன்றை பகிரங்கமாக சமூக ஊடகங்களில் பகிர்வது அரச இரகசியங்கள் குறித்த சட்டத்தின் கீழும் குற்றமாகும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »