Our Feeds


Wednesday, September 29, 2021

Anonymous

புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணியின் முன்னாள் உறுப்பினர் CCD குழுவினால் கைது!



(எம்.எப்.எம்.பஸீர்)


கொழும்பு – நாரஹேன்பிட்டி, தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் மற்றொரு சந்தேக நபர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை, உப்புவெளியைச் சேர்ந்த 40 வயதான புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச உளவுச் சேவை, சிசிடி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஒன்றிணைந்த நடவடிக்கையில் அவர் கைது செய்யப்ப்ட்டதாக சிசிடியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இவரிடம் முன்னெடுத்த ஆரம்பக்  கட்ட விசாரணைகளில் அவர்  புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிய இம்ரான் பாண்டியன் படையணியில் சேவையாற்றியவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம், பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் தடுத்து வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.

சிசிடியினர் கைது செய்த குறித்த நபர் திருகோணமலை, உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதான புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர் என பொலிசார் கூறினர்.

வைத்தியசாலையில் மீட்கப்பட்ட குண்டு தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட நபரின் வாக்குமூலத்துக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இக்கைது இடம்பெற்றதாக விசாரணைகளை வழிநடத்தும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

முதல் சந்தேக நபரிடம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முன்னெடுக்கும் விசாரணைகளில், தனக்கு குறித்த 40 வயதான, நேற்று கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், குண்டு வைத்தல், அதனை கையாளல் தொடர்பில் 6 நாட்கள் பயிற்சியளித்ததாக தெரிவித்துள்ளதாகவும் அதனை மையப்படுத்திய மேலதிக விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இதுவரை இந்த கைக்குண்டு விவகாரத்தில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரிடமும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசேட விசாரணைகள் தடுப்புக் காவலில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »