Our Feeds


Tuesday, September 21, 2021

Anonymous

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது: வெற்றிடமாக உள்ள கட்டில்கள், ஒட்சிசன் பற்றாக்குறையும் இல்லை! விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம



(நா.தனுஜா)


நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் வைத்தியசாலைகளில்  அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு  வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

இதேவேளை, பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாகவே தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.  ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக அண்மையில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் செயற்றிறனான தடுப்பூசி வழங்கல் ஆகியவற்றின் பிரதிபலனாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

‘நிச்சயமாக வசந்தம் உதயமாகும்’ என்ற தலைப்பில் ஊடக அமைச்சுடன் இணைந்து இலங்கை இலத்திரனியல் ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலத்தில் பதிவாகும் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவான வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் பதிவாகி வந்த கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தொற்றினால் வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்பட்டதுடன் அதனை முகாமை செய்வதும்  சவாலுக்குரிய விடயமாக இருந்தது.

இருப்பினும் அண்மையில் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. அதன் காரணமாக வைத்தியசாலைகளில் கொவிட் – 19 தொற்றாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரிவுகளில் கட்டில்கள் எஞ்சியுள்ளன.

அதேபோன்று முன்னர் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படக் கூடிய அவதானநிலை உருவாகியிருந்த போதிலும், தற்போது அது இல்லாமல் போயுள்ளது. ஆகவே அண்மைக் காலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதிபலன்களாக இவற்றைக் கருதமுடியும்.

அது மாத்திரமன்றி தொற்றுக்குள்ளான போதிலும், நோய் நிலைமை தீவிரமடையாத பட்சத்தில் அவர்கள் தங்களது  வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவதாலும் வைத்தியசாலைகளில் நெருக்கடி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »