Our Feeds


Tuesday, September 21, 2021

SHAHNI RAMEES

கொரோனாவால் உயிரிழந்தவருக்கு வீட்டில் அஞ்சலி செலுத்த அனுமதி ?


 -சுப்பிரமணியம் பாஸ்கரன்

 கொரோனா தொற்றால் உயிழந்தவரை அவருடைய வீட்டுக்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவமொன்று, கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

 கிளிநொச்சி - உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கொரோனா தொற்றால், கடந்த 16ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமை (18) இரவு, அவருடைய இறுதி நிகழ்வுகள், அவரின் வீட்டில் நடைபெறும் என்று ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களாலும் அரச உத்தியோகத்தர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த அலுவலகரின் உறவினர்கள் வீட்டில், கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை மக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கின்ற போது, அங்கு செல்கின்ற மக்கள் ஊடாக மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இருந்தபோதிலும் நேற்று  (19) காலை 7 மணியளவில், அவரின் சடலம், வவுனியா - பூந்தோட்டம் மயானத்துக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதிலும், அந்த வாகனம் வவுனியாவுக்குச் செல்வதற்கு பதிலாக, உதயநகர் கிழக்கில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள், அஞ்சலி செலுத்துவதற்காகத் திரண்டிருந்துள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகனம், மீளவும் வவுனியாவுக்குச் சென்றிருக்கின்றது.

இதையடுத்து, இது தொடர்பில், வைத்திய அதிகாரி பிரிவுக்கு கிராம மட்ட அரச அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இவ்வாறு தகவல் வழங்கியோருக்கு, மரணவீடு நடத்தியவருக்கு நெருங்கிய உறவினர்களில் ஒருவரான அரச உயர் அதிகாரி உட்பட்ட பலரால் தொலைபேசி ஊடாக எச்சரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின், மைத்துனர்கள் மூவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

அத்துடன், உயிரிழந்தவரின் மருமகன் கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டப்பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த மரணச் சடங்கினை வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாட்டில் பிரபல மருத்துவர் ஒருவரும் முன்னின்று செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »